2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு தரப்படும்: சந்திரிகா

Princiya Dixci   / 2015 மே 13 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க, அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக அரச உயர்மட்டத்துடன் தொடர்பு கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கே.எம்.கபீர், செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.
 
இலங்கை அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சங்க உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவை  கொழும்பு நகரசபை மண்டபத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  
 
இதன்போது அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
 
குறிப்பாக, இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.கபீர் கலந்துகொண்டு பல ஆக்கபூர்மான கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

அதாவது, அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ள மோட்டார் சைக்கிளை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் அனைவரும் சுமார் ஒரு வருட காலத்தை பயிற்சிக் காலமாக கழித்துள்ளனர். அதனை சேவைக்காலத்தினுள் உள்ளடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் மாதாந்த சம்பள அளவுத்திட்டத்தை அதிகரிக்க வேண்டும்.
 
அரசினால் நடத்தப்படுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட உயர் மட்ட போட்டிப் பரீட்சைகளில்; அரச சேவையிலுள்ள ஊழியர்கள் தோற்றுவதாயின், 05 வருட சேவைக்காலத்தை பெற்றிருத்தல் வேண்டுமென்ற நியதியை 03 வருடங்களாகக் குறைத்தல் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகள் மற்றும் அதனையொட்டிய திட்ட முன்னெடுப்புக்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இவ்விடயங்களை கவனமாகச் செவிமடுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, இது தொடர்பாக அரச உயர் மட்டத்துடன் தொடர்கொண்டு தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

குறிப்பாக முன்னைய அரசாங்கத்தின் மிக மோசமான நிதி கையாழ்கை நடவடிக்கைகளினால் தற்போதைய அரசாங்கமானது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதனாலேயே, மீதமாக வழங்க வேண்டியுள்ள மோட்டார் சைக்கிள்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவற்றை வழங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதற்கு குறித்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .