2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வெளியிடப்படும்'

Suganthini Ratnam   / 2015 மே 14 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,எஸ்.கார்த்திகேசு

கடந்த ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பாரிய  ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், பல மில்லியன் ரூபாய்களும்; கொள்ளையிடப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இதற்காக தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின்  மாகாணசபை உறுப்பினர்கள் தம்முடன்  இணைந்து குரல் கொடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய கட்டடம் மற்றும் சந்தைக் கட்டடத் திறப்பு விழா,  வியாழக்கிழமை (14) நடைபெற்றது.  இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான  கிழக்கு மாகாணசபை ஆட்சியில் ஊழல் மோசடிகள் தவிர்க்கப்பட்டு, உரிய முறையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இந்த மாகாணத்தில்  பாரிய அபிவிருத்திகளை கண்டிருக்கமுடியும்.

அப்போதைய முதலமைச்சராக இருந்தவரும்  தமிழர் ஒருவரே.  அவர்கள் மக்கள் நலனை  கருத்திற்கொள்ளாது, அப்போதைய அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்து உழைப்பதை நோக்கமாக கொண்டு செயற்பட்டார்கள்.

மாகாணசபை ஆட்சி முறைமை எவரால் கொண்டுவரப்பட்டதோ, அவர்கள் நன்மை பெற முடியாத நிலை தற்போது கிழக்கில் உள்ளது. கடந்தகால ஆட்சியின்போது, எவ்வித அதிகாரமுமின்றி வாழ்ந்த தமிழ் மக்களுக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கூட முழுமையான அதிகாரத்தை வழங்கவில்லை.

அவ்வாறு நடைபெற்றிருந்தால் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வந்திருக்கவேண்டும்.  அத்துடன், இரு பெரும் கட்சிகள் ஒன்றாக ஆட்சியை நடத்துகின்ற நாட்டில் மூன்றாவது நிலையிலுள்ள கட்சியே எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும். அதனையும் இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சுப் பதவிகளுக்கு அடிமைப்பட்டு செல்லாது. அவ்வாறு குறுகிய காலத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றவும் விரும்பவில்லை' என்றார்.

இந்த நிகழ்வில்; முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான பி.தயாரெட்ண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், எம்.இராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .