2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Suganthini Ratnam   / 2015 மே 15 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை  மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின்  பிரச்சினையை  மத்திய அரசாங்கம் மற்றும் அமைச்சரவையில் முன்வைத்து விரைவில் தீர்வு எட்டப்படும் என்று முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  உத்தரவாதம் வழங்கியுள்ளார் என்று அந்த மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட  தமிழ்ப் பட்டதாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில்  மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று வியாழக்கிழமை  சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார் என்றும் அவர்கள் கூறினர்.

இருந்தபோதிலும், இதற்கான தீர்வு விரைவில் கிடைக்காவிட்டால், சாகும்வரையான  உண்ணாவிரதம்   மேற்கொள்ளப்படும்  என்றும்  வேலைவாய்ப்புக்களில் புறக்கணிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் தெரிவித்தனர்

இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் மகஜரொன்றையும் இவர்கள் கையளித்தனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களில் 3 வருடகாலமாக  புறக்கணிக்கப்பட்டு வருகின்ற அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான ஒழுங்குகளை காலதாமதமின்றி செய்யவேண்டும்.

2014-04-03 அன்று  வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தருக்கான திறமை, மாவட்டம் மற்றும் இன ரீதியாக முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் காலதாமதமுமின்றி  ஒரேநேரத்தில் நியமனங்கள் வழங்கப்படவேண்டும். அத்துடன், இவ்வளவு காலத்துக்குமான முழு சம்பளமும் இழப்பீடாக வழங்கவேண்டும்.

2011 தொடக்கம் 2014 வரை பட்டப்படிப்பை முடித்து காணப்படும் அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளை இனிமேலும் புறக்கணிக்காமல் எங்களுக்கான நியமனங்களை காலதாமதமின்றி வழங்க ஆவண செய்ய வேண்டும். கிழக்கு மாகாணசபையால் இன விகிதாசார அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுவதற்கான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளை முற்றுமுழுதாக புறக்கணிக்கும் ஒரு செயலாக காணப்படுகிறது. ஆகவே, இதை இல்லாமல்  செய்து திறமை அடிப்படையிலும் மொழியின் அடிப்படையிலும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும். இதற்கான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படவேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2015-;05;-11 அன்று  ஆசிரியர்களுக்கான சிங்களமொழிமூல பட்டதாரிகளுக்கு  மட்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதேவேளை,  தமிழ் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருந்தும் அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. எனவே, அதற்கு  மிக விரைவாக தமிழ் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக திறமையான தமிழ்ப் பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்'  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .