2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாட்டில் இனவாதத்தை பரப்பி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர்

Sudharshini   / 2015 மே 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

நாட்டில் இனவாதத்தை பரப்பி மீண்டும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு சக்திகள் முனைந்து வருகின்ற நிலையில், வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட்டு அதிகப் பெரும்பான்மையினைப் பெற்று மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க வருவதனை எந்தச் சக்திகளினாலும் தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டங்கள்  தொடர்பாக கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் சம்மாந்துறை கட்சி அலுவலகத்தில்

சனிக்கிழமை (16)  நடைபெற்றது. அதில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இனவாதத்தையும் அடிப்படை வாதத்தையும் மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அவர்களை ஏமாற்றி மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே இன்று மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரமுயற்சிக்கின்றார்கள். இவர்களின் முயற்சிகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.

மஹிந்தவின் ஆட்சியில் மக்களின் பணத்தை வீணடித்து ஊழல்மோசடிகளில் ஈடுபட்டவர்களே, தற்போது ஆட்சியினை பறிக்கப்போவதாக கூறுகின்றார்கள். இவர்கள் ஆட்சியினை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

கடந்த ஆட்சியில் மக்கள் பொருளாதார ரீதியாகவும் ஜனநாயக அடக்கு முறைகளிலும் நெருக்கடியை சந்தித்தனர். அதில் இருந்து மக்கள் விடுபடவும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவுமே மக்கள்  வாக்களித்தனர்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கூட்டணி மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையுள்ளது.

 20 வருடங்களின் பின்னர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மக்கள் சக்தி அதிகரித்துக் காணப்படுகின்றது. அதற்கு சான்று அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டமாகும். 1977ஆம் அண்டுக்குப் பின்னர் இவ்வருடம் நடைபெற்ற மேதினக் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக வருவதனை எந்தச் சக்திகளினாலும் தடுக்க முடியாது.

எனவே, வெகுவிரைவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினை வெற்றி பெறச்செய்து நாட்டினை சுபீட்சமான எதிர்காலத்திற்கு இட்டுச்செல்ல அனைத்து இன மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .