2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்'

Thipaan   / 2015 மே 18 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் கண்ணீர் துவைந்த மே 18 நினைவு தினத்தை, அரசியல் நடத்தும் தினமாக்க வேண்டாம் என அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

'எம்மை  விட்டு பிரிந்து சென்ற உறவுகளின் ஆத்ம சாந்தி பெறும் வகையில் அவர்களுக்கான புனிதமான பிரார்த்தனை நினைவஞ்சலி தினமாக அமைய வேண்டும்' என  அவர் கூறியுள்ளார். 

'சர்வதேசத்தை திரும்பிப் பார்க்கவைத்த இலங்கையில் இடம்பெற்ற இன சுத்திகரிப்பு போரில் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த அந்த மக்கள் புனிதர்கள், அவர்கள் எமது இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்' என தெரிவித்தார்.

'அவர்களை மறந்து எம்மால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. அப்படிப்பட்ட உறவுகளின் புனித தினத்தில் நாம் அனைவரும் ஒவ்வொறு இல்லங்களிலும் கோவில்களிலும் தேவாலயங்களிலும் ஒரு தீபமாவது ஏற்றி உணர்வு பூர்வமாக பிரார்த்திக்க வேண்டும்'.

'இலங்கையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் தொடங்கிய நாள் முதல் இறுதி யுத்தம் முடியும் வரை அந்த மக்களின் துன்பங்களில் பங்கு கொண்டவன் என்ற வகையிலும் அந்த மக்களோடு தொடர்புகளை வைத்திருந்தவன் என்றவகையில் இம் மக்கள் எதிர் கொண்ட துன்பங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது' என தெரிவித்தார். 

'இறுதி யுத்த சூழலில் சிக்குண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபகரமாக மரணித்து போக, மீதி மக்கள் இறந்து பிழைத்தவர்கள் போல் துயரங்களுடன் நடைபிணமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இறுதி கட்ட யுத்தத்தில் இறந்த உறவுகளின் ஆத்மசாந்தி கிடைக்கும் நோக்குடன் இன்று அமைதியான சூழ் நிலையில் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற தமிழ் உறவுகள் பிரார்த்தனைகளில் ஈடுபடவுள்ளனர். 

இது புனிதமான ஒரு நிகழ்வாக உணர்வு பூர்வமாக அனைவராலும் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இதனை விடுத்து இந் நிகழ்வினை அரசியல் சாயங்கள் பூசி தமது எதிர்கால அரசியல் வாழ்கையை தக்கவைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தக்கூடாது' என்றார்.

'எம் நெஞ்சில் விழுந்த இந்தப் பேரிடி ஜென்மங்கள் கடந்தும் பரிணாமம் அடையாது எமது சந்ததிகளின் இதயங்களில் என்றென்றும் இருக்கத்தான் போகின்றது.

அந்தவகையில் எம் உறவுகளின் இழப்பினையும் ஈவினையும் தாக்கியதான இந்த வலிகள் சுமந்த மே 18ஆம் திகதி எங்கள் நெஞ்சங்களில் சுடரேற்றி அகமுருகி உணர்வுகளால் அஞ்சலிப்போம்'.

இந்த தமிழ் உறவுகளை நினைவு கூறுவது எமது ஒவ்வொருவரினதும் கடமையும் உரிமையும் இதில் எந்தவொரு அரசியல் சாயங்களுக்கம் இடமில்லை தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .