2025 ஜூலை 05, சனிக்கிழமை

'மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கும் மஹிந்தவுக்கு பொதுத்தேர்தலில் பதிலடி கொடுப்போம்'

Gavitha   / 2015 மே 24 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத உணர்வை தெற்கில் விதைத்து மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இனவாத அரசியலுக்கு எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்து மீண்டும் அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதான அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி தெரிவித்தார்.

சம்மாந்துறை செந்நெல் கிராமம் மற்றும் மலையடிக்கிராமங்களில் சனிக்கிழமை (23) நடைபெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் இன்று நாட்டில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனவாத உணர்வலைகளை மீண்டும் தூண்டி விடுவதற்கான பிரசாரங்களை முழுமூச்சுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

இனவாதச் சிந்தனையுடைய அரசியல் சக்திகளும் தங்களது அரசியல் எதிர்காலமே சூனியமாகிப் போகுமெனக் கருதும் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, பத்துல குணவர்த்தன மற்றும் உதய கமன்பில போன்றோர்கள் மஹிந்தவை முன்நிறுத்தி பின்னால் வரப்பார்க்கின்றனர். இவர்கள் மஹிந்தவின் மீதான அபிமானமல்ல. தங்களுடைய அரசியல் இருப்புக்கு அவரை விட்டால் வேறு கதியில்லை என்பதுதான் என்று அவர் தெரிவித்தார்.

பத்து வருடங்கள் நாட்டை ஆட்சிசெய்த மஹிந்த ராஜபக்ஷ சட்டத்தின் ஆட்சி சீர்குலைவுக்கும் நாட்டில் வரலாறு கண்டிராத ஊழல் மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் மற்றும் இனவாத அரசியல் ஆகியவற்றுக்கு காரணமாக இருந்தார்.

அத்தகைய ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பெருபான்மை மக்கள் உட்பட அனைத்து இன மக்களும்  விரும்பமாட்டார்கள்.

இதனை உணர்ந்த மஹிந்த பௌத்த ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதாகக் காட்டிக் கொள்ளும் இவர் மத உணர்வைப் பயன்படுத்தி பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கே முயல்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே நாட்டில் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இனவாத உணர்வலைகளை பெரும்பான்மையின மக்கள் மத்தியில் தூண்டி மீண்டும் ஆட்சியினைக் கைப்பற்ற முயல்கின்றார். இதற்கு மக்கள் அனைவரும் வருகின்ற பொதுத் தேர்தலில் தகுந்த பதிலடியினைக் கொடுத்து மீண்டும் அவரை வீட்டுக்கு அனுப்பதோடு, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .