2025 மே 03, சனிக்கிழமை

அம்பாறையில் 40 குடும்பங்கள் இடம்பெயர்வு; சாகாமத்தில் கூடுதலான மழை வீழ்ச்சி பதிவு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.எஸ்.எம்.ஹனீபா. வி.சுகிர்தகுமார்

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயராஜன் இன்று வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.

திருக்கோவில் 01ம் பிரிவு, விநாயகபுரம் மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களே இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களும் வெள்ள அனர்த்தத்துக்கு  உள்ளாகியுள்ளன. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை திருக்கோவில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர்  உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் அடை மழை பெய்து வருகின்றது.

இன்று காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் சாகாமத்தில் ஆகக்கூடுதலான மழை வீழ்ச்சியாக 180.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் ருபேஸ்குளம் 134.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்  பதியத்தலாவ 119.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்  அக்கரைப்பற்று 100.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  பொத்துவில் வானிலை அவதான நிலைய உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.நஹீம் தெரிவித்தார்.

சில பாடசாலைகளில் மாணவர்களின் வரவின்மையால் கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அம்பாரை பிரதான வீதி, கல்முனை பிரதான வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் மக்களின் அன்றாட நடவடிக்கைளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதையும் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளமையும் காண முடிந்தது.

திருக்கோவில் பிரதேசத்தில் தாழ் நிலப்பகுதிகளில் சில வீடுகளுக்குள் நீர் உட் புகுந்துள்ளது. அக்கரைப்பற்றில் வீடொன்றிலிருந்த பாரிய தென்னை மரம் ஒன்றும் வெள்ளத்தினால் சாய்ந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X