2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இம்மாதம் முதல், வீட்டுக்கு வீடு இடைவிடாத போராட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நிர்வாகத்தின் முறைகேடுகள் தொடர்பில் மாட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், இம்மாதம் முதல் வீட்டுக்கு வீடு இடைவிடாத விளக்கமளிக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு அறிவித்துள்ளனர்.  

தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டு மொத்த மாணவர்களின் நலன்களையிட்டு, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட உரிமைகளுக்காகத் தாம் போராடி வரும்போது, அதனைக் கண்டுகொள்ளாத கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தமது போராட்டத்துக்கு இனவாத முத்திரை குத்துவது கீழ்த்தரமான செயல் எனவும் போராட்டம் நடத்தி வரும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.  

இவ்விடயம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) அறிக்கை வெளியிட்டுள்ள மாணவர் அமைப்பு, அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

“இன, பேதம் இல்லாத நாம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் இனிமேல் கற்க வரப்போகும் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களின் உரிமைக்காகவே பல்வேறு தடைகள் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டபோதும், இரவு - பகலாகப் போராடி வருகின்றோம். 

“ஆயினும், எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக இனவாதத்தைத் தூண்டி, மாணவர்களைப் பிரித்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக, கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் கீழ்த்தரமாகச் செயற்படுகின்றது. 

“இதன் உண்மை நிலையை பிரதேச மக்களும் சகோதரத்துவ சமூகங்களும் அறிந்துகொள்வதற்காக நாம் செப்டெம்பர் மாதம் முழுவதும் வீட்டுக்கு வீடு, இடைவிடாத விளக்கமளிக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.  

“எமது நியாயமான போராட்டம் ஆரம்பித்து தற்போது மூன்று மாதங்களை நிறைவு செய்துள்ளபோதும் அதுபற்றி அக்கறை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகம் அதனை மூடி மறைக்க முயற்சிக்கின்றது. இது ஓர் இனத்துக்கான உரிமைப் போராட்டமல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .