Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஜனவரி 31 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லையை மீட்பதற்கு பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வெற்றியளிக்காவிட்டால் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு, நேற்று (30) பிற்பகல் நடைபெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் எஸ்.குபேரனால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை நிறைவேற்றும் தீர்மானத்தை அறிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநகர சபை உறுப்பினர் எஸ்.குபேரன், பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில்
"கல்முனையின் வடக்கு எல்லை, வர்த்தமானி அறிவித்தல்களின் பிரகாரம் பெரிய நீலாவணையிலுள்ள தாமரை மடு சந்தியை ஊடறுத்து செல்கின்ற கார்ட் வீதியாக இருக்கிறது. இதுவே அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையாகவும் இருக்கிறது.
“1987ஆம் ஆண்டு, பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம், கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டபோதும்; 1998ஆம் ஆண்டு, நகர சபையாக தரமுயர்த்தப்பட்டபோதும்; 2001ஆம் ஆண்டு, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்ட போதும் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்களில் இந்த எல்லை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“ஆனால், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை, இந்த எல்லையைத் தாண்டி, சுமார் 400 மீற்றர் தூரமளவில் உள்ள பகுதியை ஊடுருவி, ஆக்கிரமித்து, நிர்வாகம் செய்து வருகிறது.
“அந்தப் பிரதேச சபையால் அப்பகுதி மக்களிடம் சோலை வரி அறவிடப்படுகிறது. கட்டட அனுமதியையும் அப்பிரதேச சபையே வழங்கி வருகிறது. அதுபோல் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் அப்பகுதி மக்களின் பதிவுகளைக் கையாண்டு வருகின்றது.
“ ஆகையால், இனியும் தாமதியாது, இப்பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரும் இப்பிரேரணையை, எமது சபை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக பிரேரணையை நிறைவுக்குக் கொண்டு வந்து உரையாற்றிய மேயர், இந்த எல்லைப் பிரச்சினையானது தற்போது மிகவும் பாரதூரமான விடயமாக மாறியுள்ளதாகவும் இதற்குத் தீர்வு காண்பதற்காக ஒரு உயர்மட்டக் கூட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி ஒழுங்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்துக்கு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இரு தரப்பு ஊர்ப் பிரதிநிதிகளும் அழைக்கப்படவுள்ளனர் எனவும் இப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் மாநகர சபை சார்பில் நீதிமன்றம் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேயர் அறிவித்தார்.
இதன்பிரகாரம், குறித்த பிரேரணை சபையால் ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
1 hours ago