2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கூட்டமைப்பும் அ.இ.ம.கா.வும் ஒருமித்து பணியாற்ற இணக்கம்

Niroshini   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ பரீத்

வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் உட்பட தமிழ், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினையைத் தீர்க்க இரண்டு சமூகங்களின் அரசியல் தலைமைகளும் ஒருமித்து பணியாற்றுவதற்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கும் இடையில்  இணக்கம் காணப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான தூதுக் குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தலைமையிலான தூதுக் குழுவுக்கும் இடையில் சனிக்கிழமை(19) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்;பெற்ற சந்திப்பிலேயே இந்த இணக்கம் காணப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைப் பற்றி வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான  மாவை சேனாதிராசா  கூறியதாவது,

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பாரிய பிரச்சினை அல்ல. தமிழர்களும் முஸ்லிம்களும்  ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலமே அவர்கள் நிரந்தரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான விடயங்களுக்கு ஒன்று கூடி பேசுவதன் மூலம் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தும் என்றார்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கூறியதாவது,

வட புல முஸ்லிம்கள் சுமார் 25 ஆண்டு காலம் அகதி  முகாம்களில் வாழ்ந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். இவர்கள் வட புலத்தில் குடியேறுவதற்கு  காணிப் பிரச்சினை தடையாக உள்ளது.

எனவே, இது தொடர்பாக உரியவர்கள் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

தழிழர்களும் முஸ்லிம்களும் என்றுமே பிரிந்து வாழ முடியாது. அவர்களிடையே காணப்படும் சிறு சிறு பிரச்சினைகள் கலையப்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வு ,அரசியல் அமைப்பு திருத்தம், எல்லை நிர்ணயம், தேர்தல் முறையில் மாற்றம் போன்ற இன்னோரான பிரச்சினையும் இரண்டு சமூகங்களும் ஒருவர் ஒருவரோடு மனம் திறந்து பேசுவதன் மூலமே எதிர்கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X