2025 மே 08, வியாழக்கிழமை

கடற்றொழில் ஸ்தம்பிதம்; உதவி கோரும் மீனவர்கள்

Princiya Dixci   / 2020 நவம்பர் 04 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகள்  ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையால், பல்வேறு சிரமங்களைத் தாம் எதிர்கொண்டு வருவதாக, அம்பாறை மாவட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

 அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் பிரதேசங்களில் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களே மேற்கண்டவாறு தெரிவித்து, தமக்கு உதவுமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளமையால், தமது படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடமின்றி, கனரக இயந்திரத்துக்கு அதிக பணத்தைச் செலவிட்டு, கடற்கரையோரங்களுக்கு இழுத்து வரவேண்டின துர்ப்பாக்கிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அம்மீனவர்கள் தெரிவித்தனர். 

இதனால் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் படகுகள் பகுதியளவில் சேதமடைவதுடன், கரையோரங்களில் கருவாட்டுத் தொழில்  செய்வோர் இடவசதி இன்மையை எதிர்கொண்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

அதேவேளை, அம்பாறை - ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் மூடியுள்ள மணல்  அகற்றப்படாமையால், மட்டக்களப்பு - வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலேயே கடந்த காலங்களில்  தமது படகுகளை நிறுத்தி வந்தனர்.

எனினும், தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பிரதேசத்தில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் தமது படகுகளை அங்கு கொண்டு சென்று நிறுத்துவதில், ஒலுவில் மீனவர்கள் பெரும் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

குறிப்பாக, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் பயணிக்கும் மீனவர்கள், தமது கடற்றொழில் செயற்பாடுகளுக்கு வேறு மாவட்டங்களின் துறைமுகங்களைப் பயன்படுத்துவதாயின் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் அவசியமாகுமென, கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, அம்பாறை மாவட்டத்தில் 300க்கு மேற்பட்ட படகுகள் தற்போது துறைமுக வசதி இன்மையால் கடலில் தத்தளிக்கின்றன.  

தமது தொழிலை இழந்துள்ள ஆழ்கடல் மீனவர்களுக்கு இதுவரை எவ்வித வாழ்வாதார வசதிகளும் வழங்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். எனவே, தமக்கான வாழ்வாதாரத்தையும் தமது படகுகளையும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் உதவ முன்வர வேண்டுமென, அம்பாறை மாவட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

அம்பாறை மாவட்டத்தில் 10,000 ஆழ்கடல் மீனவர்கள் உட்பட 23,000 மீனவர்கள் வாழ்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X