2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூர் பிரதேச மக்கள்

Freelancer   / 2022 ஜூன் 15 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய  கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.கடற்கரை பகுதியில் உள்ள  சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன், 75 இற்கும் மேற்பட்ட காணிகள்  மற்றும் தென்னந் தோட்டங்களும் கடலரிப்பால் அழிந்துள்ளன.

இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில்  ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு  அதிகமாக ஏற்படுவதுடன்,  கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் இப்பிரதேச  கடற்கரை பிரதேசத்தில்  தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளதுடன், கரையோரங்களில் நிர்மாணிக்கபட்டிருந்த கட்டடங்களின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது.

மேலும், கடலரிப்பினால் அப்பகுதியில்  போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட  மக்கள்  அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு,  அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்து வருகின்றமையினை தடுக்க  நடவடிக்கை முன்னெடுக்க பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, நிந்தவூர் பிரதேசத்தில் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக  கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் கடந்த காலங்களில் மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் நடைமுறைப்படுத்தபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

மேலும், மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைப்பது அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால் கரையோரத்தில் பேணல் திணைக்களத்தினால் மண் மூடைகள் இடுவதற்காக திட்டமிட்டிருந்ததுடன், ஜியோ பேக் (Geo bag)  பைகளில் மண் இட்டு நிரப்பி கடலரிப்பை தடுக்கும் முறைகள் தொடர்பில்  அத்    திணைக்களத்தினால் பல மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட இருந்தமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X