2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கரையோர அபிவிருத்தியில் தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிப்பு’

Princiya Dixci   / 2021 ஜூன் 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கல்முனை மாநகர கரையோர அபிவிருத்தித் திட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் முற்றாகப் புறக்கணிப்பட்டு வருவதாக, கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அது தொடர்பாக இடம்பெற்ற திட்டமிடல் கூட்டத்துக்கு தமிழ்ப் பிரதேச செயலாளர் மற்றும் மாநகர சபையின் தமிழ் உறுப்பினர்களுக்கு எவ்வித அழைப்புகளும் விடுக்கப்படாமல் கதவடைப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கல்முனை மாநகர அபிவிருத்தியில் இன ரீதியான பாகுபாடு தொடர்கிறது. கொரோனாவை விடக் கொடியவர்கள் இவர்கள்” எனவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்முனை மாநகர சபை எல்லைக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் இல்லையா, தமிழர்கள் இல்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொட்ர்பான உறுப்பினர் ராஜன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கல்முனை மாநகர சபை என்பது தனியாக முஸ்லிம்களுக்கு மட்டுமானது அல்ல. கல்முனை மாநகர மேயரினதும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசினதும் செயற்பாடு, தமிழர்களைப் புறக்கணிப்பதாகவும் இனவாதமாக செயற்பட்டு, வங்குரோத்து அரசியல் செய்வதாகவுமே தொடர்கின்றது.

“தமிழர் பகுதிக்குள் உள்ள இஸ்லாமாபாத், கல்முனைக்குடி மற்றும் மருதமுனை  பகுதிகளில் கார்ப்பட் வீதிகள் போடப்பட்டுள்ளன. ஆனால், அருகிலுள்ள தமிழ்க் கிராமங்களுக்கு அது மறுக்கப்பட்டுள்ளது. இன்றும் யாரும் அதனை நேரடியாகக் காணலாம்.

“மாநகர சபைக்குட்பட்ட வாசிகசாலைகளில்  மருதமுனையில்  புனரமைப்பு நடக்கிறது. ஆனால், பாண்டிருப்பு, பெரியநீலாவணை, கல்முனை தமிழ்ப் பகுதிகளில் உள்ள நூலகங்கள் எவ்விதப் புனரமைப்போ அபிவிருத்தியோ இல்லாமல் காணப்படுகின்றன.

“இப்படிப்பட்ட தொடர் புறக்கணிப்பும் பாகுபாடுமே தமிழ் மக்கள் தனியான பிரதேச செயலகம் மற்றும் தனியான நகர சபை கோருவதற்குக் காரணம் என்பதை மறக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .