2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்முனை மாணவன் வெள்ளவத்தையில் மீட்பு

Freelancer   / 2023 மே 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

பிரத்தியேக வகுப்புக்கு  செல்வதாகக் கூறிச் சென்ற மாணவன் மாயமாகிய நிலையில், கொழும்பு - வெள்ளவத்தை பஸ் தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (08) மாலை சகோதரியினால் மீட்கப்பட்ட குறித்த மாணவன் தற்போது பாதுகாப்பாக  தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை தலைமையக பொலிஸார், வெள்ளவத்தை சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் தரம்-10 இல் கல்வி பயிலும்  15 வயதுடைய உடையார் வீதியைச் சேர்ந்த துஸ்யந்தன் டேவிட்  தக்சிதன் என்ற மாணவனே காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் ஆலோசனைக்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பல பொலிஸ் குழுக்கள் காணாமல் சென்ற மாணவன் தொடர்பில் விசாரணைகளை பரவலாக முன்னெடுத்திருந்தன.

காணாமல் போன மாணவன் சக மாணவர்களிடம் பாடசாலையை விட்டு பிற்பகல் 1 மணியளவில் பிஸ்கட் வாங்குவதாக கூறி சைக்கிளில் வெளியேறிச் செல்வது சிசிடிவி கமெரா வீடியோவில் அவதானிக்கப்பட்ட நிலையில், துரிதமாக விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில்  சமூக ஊடகங்களிலும் காணாமல் சென்ற மாணவன் தொடர்பான தகவலுடன் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து காணாமல் போன மாணவனது சகோதரி, திங்கட்கிழமை (08) மாலை கல்முனை பகுதிக்கு வருவதற்கு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனது சகோதரன் தனிமையில் இருப்பதை உறுதிபடுத்தி, உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய உறவினர்கள் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக கொழும்பு நோக்கி உறவினர்களுடன் கல்முனை தலைமையக பொலிஸார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .