2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் 4 ஆயிரம் ஆசிரியருக்கு தட்டுப்பாடு

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கிழக்கில் ஆளணியின்படி, சுமார் 24 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. எனினும், தற்போது 20 ஆயிரம் ஆசிரியர்களே இருக்கின்றனர். சுமார் 4,000 ஆசிரியருக்கு தட்டுப்பாடு நிலவியது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக தெரிவித்தார்.

எனினும், அண்மையில் 3 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கிழக்கு பாடசாலைகளில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற நிகழ்​வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண கல்விச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில்: “கல்விப் புலத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. சரியான ஆராய்ச்சிகள் இல்லாமையே அதற்குக் காரணம். பிரச்சினைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

“ஒரு பாடசாலையைத் திறந்தால் ஆயிரம் சிறைச்சாலைகளை மூடிவிடலாம் என்பார்கள். சுகாதாரத்துக்கு அடுத்தபடியாக கல்விக்கு பில்லியன் கணக்கில் செலவுசெய்கிறார்கள்.

“ஆனால், கல்விக்காக செலவழிக்கும் பில்லியனுக்கு கைமாறாக நாம் என்ன உற்பத்தி செய்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக கிழக்கு தொடர்ந்து 9ஆவது இடத்தில் இருந்து வருகிறது.

“கல்வியில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர அனைவரும் சிந்திக்கவேண்டும். திட்டங்கள் வகுத்து அதன்படி உழைக்கவேண்டும். 'அனைவருக்கும் கல்வி' என்பது யுனிசெவ் தொடக்கம் பல நாடுகளுக்கும் பொதுவான வாசகமாகவுள்ளது.' சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி' என்பதே எனது வாசகம்.

“கிழக்கில் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாதுள்ளனர். மேசன், தச்சு போன்ற வேலை செய்கின்றனர். அப்படியெனின்,  எங்கோ ஒரு தவறு நடந்திருக்கிறது. அதனை ஆராயவேண்டும்.

“கிழக்கு மாகாணம் இன்னும் 3 வருடங்களில் 5ஆவது இடத்தை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X