2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சிசபை விவகாரம்; பிரேரணை முன்வைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கல்முனை மாநகரசபையின் தற்போதைய ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநகரசபை அமர்வில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிசபையை உருவாக்குவது தொடர்பில் பிரேரணையொன்றை நிறைவேற்ற வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி.யஹியாகான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,  'அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்கும் அதேவேளை, முஸ்லிம்களுக்கான தனியான கரையோர மாவட்டம் மற்றும் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை ஆகியனவும் இந்தக் கட்சியின் மூலம் கிடைக்க வேண்டுமென்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் கூட இவைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கரையோர மாவட்டக் கோரிக்கை எந்தளவு நிறைவேற்றப்படும் என்பது தொடர்பில் எதனையும் கூற முடியாத நிலைமையே தொடர்ந்து காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ காலம் முதல் இன்றைய தேசிய அரசாங்கம்வரை  கரையோர மாவட்டம் தொடர்பில் கரிசனை காட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், கரையோர மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையிலுமே கடந்த கால தேர்தல்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிகளவில் வாக்களித்தனர் என்பதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. எனவே, இந்த விடயம் இவ்வாறு கிடப்பிலுள்ள நிலையில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிசபை விவகாரமும் கானல் நீராகப் போவது அந்த மக்களை ஏமாற்றத்துக்குள் ஆக்கிவிடும். எனவே, இதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

இதன் ஒரு கட்டமாகவே கல்முனை மாநகர சபை இது தொடர்பான பிரேரணை ஒன்றினை சபைக்கு கொண்டு வந்து அதனை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். எனவே, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள கல்முனை மாநாகர சபை அமர்வில் சாய்ந்தமருவை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு உறுப்பினர்களும் இதனைப் பிரேரணையாக முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறானதொரு பிரேரணை முன்வைக்கப்படாவிடில் அல்லது முன்வைக்கப்பட்டும் அது நிறைவேற்றப்படாது போனால் சாய்ந்தமருதுக்கு தனியாக உள்ளுராட்சி சபை உருவாகுவதனை எந்தப் தரப்பினர் விரும்பவில்லை என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவும் இது சந்தர்ப்பமாக அமைந்து விடும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X