2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருது முடங்கும் அபாயம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர், அஸ்லம் எஸ்.மௌலானா

அக்கறைப்பற்றுக்கு அடுத்ததாக சாய்ந்தமருதுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலை தோன்றியுள்ளதாகவும் இது தொடர்ந்தால் சாய்ந்தமருது முடக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் தெரிவித்தார். 

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று (12) மாலை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேற்படி நிலை உருவாகுவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் எங்களோடு சேர்ந்து பணியாற்ற  முன்வர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சமீபத்தைய நாட்களில் உக்கிரமடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துதலும் எங்களையும் எமது ஊர் மக்களையும் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமை” என்றார்.

அத்துடன், “நாம் நேரம் காலம் பாராது இந்த தொற்றை கட்டுப்படுத்த பணி செய்கிறோம். எங்களின் சேவைக்கு கிராம சேவை அதிகாரிகளும், பொலிஸாரும் நிறைய ஒத்துழைப்புத் தருகிறார்கள். எது எப்படியோ, பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நாம் இந்த நோய்த் தொற்றில் இருந்து நமது மக்களை மீட்டெடுக்கலாம்” என இங்கு உரையாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

“நாம் தேவை நிமிர்த்தம் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுதல் கட்டாயமாகும். எந்நிலையிலும் 5 அடி சமூக இடைவெளியை பேணிக் கொள்ளல் வேண்டும், கொரோனா வைரஸ் அதிகமுள்ள அபாய பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்தல் நன்று. நாங்கள் எங்களின் கைகளை  அடிக்கடி சவர்க்காரமிட்டு நன்றாகக் கழுவுதல் வேண்டும். வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள், போகிறவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்களாகியவர்கள் உரிய அதிகாரிகள், கிராம சேவகர்கள், சுகாதார பரிசோதகர்களுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்” எனவும் அவர்கள் அறிவுறுத்தினர். 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சாய்ந்தமருது பிரதேசத்தில் கிராமிய விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வதின் ஆலோசனையின் பேரில், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில், இப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலுமாக 17 கிராமிய விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X