2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தமிழர்களின் காணி உரிமை கபளீகரம்

Princiya Dixci   / 2022 மே 09 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனை மாநகரத்தில் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் சதித்திட்டத்தின் ஓரங்கமாக காணி பதியும் உரிமை கச்சிதமாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவை ஒருபோதும் இன உறவை வலுப்படுத்த உதவாது; மாறாக விரிசல்களை ஏற்படுத்தும் என்றும் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கல்முனை காணி பதிவகத்தில் காணி மற்றும் ஆவணங்கள் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியில் 2012 இல் இருந்து பதிவு  செய்யப்பட்டு வந்தது.

“13 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி கல்முனை காணி பதிவகம் இயங்கி வருகிறது. காணி பதிவகத்தின் கீழ், கல்முனை வடக்கு செயலக பிரிவின் கீழ் உள்ள 29 கிராம சேவகர் பிரிவில் உள்ள காணிகள் இதுவரை காலமும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் பதிவு செய்யப்பட்டு வந்தது.

“கல்முனையின் இன வாதத்தையும், இன குரோதத்தையும் விதைத்து அரசியல் செய்து வரும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான அழுத்தத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உரிய பதிவு நடவடிக்கை அனைத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது.

 

“பதிவாளர் நாயகத்தின் கடித்தின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

“இதேவேளை, கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திலிருந்தும் தமிழ்பிரதேச காணிப் பதிவுகளை அங்கு பதியவேண்டாம். இனிமேல் எமது செயலகத்தின் பெயரின் கீழ்  மட்டுமே பதியவேண்டும் என பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம்.

“இந்த விடயம் கல்முனையில் தமிழ் - முஸ்லிம் இன விரிசலை மேலும் வலுப்படுத்தி, அரசியல் ஆதாயம் பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X