2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாலிக்கொடி அபகரிப்பு கணவனால் முறியடிப்பு; ஐவர் காயம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 03 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்   

தாலிக்கொடியை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சித்த நபரைப் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன், மனைவி, பிள்ளை, தாலியை அபகரித்த நபர் மற்றும் வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் விபத்துக்குள்ளாகி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களில் இருவர், மேலதிக சிகிச்சைக்காக கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பிரதான வீதியில், நேற்றிரவு (02) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் மூன்றும் காரொன்றும் சேதமடைந்துள்ளன. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பனங்காடு பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி, மோட்டார் சைக்கிளில் மேற்படி குடும்பம் சென்று கொண்டிருக்கையில், மனைவியின் தாலியை, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் அறுத்தெடுத்து தப்பித்துச் செல்கையில், அந்நபரைக் கணவன் பின்தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து, சாகாமம் பிரதான வீதி, பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக அந்நபரை இடைமறிக்க கணவன் முற்பட்ட வேளை, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதாக, விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் இவ்விபத்தில் சிக்கியுள்ளது. 

இதனால் ஐவரும் காயமடைந்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மயக்க நிலையடைந்த கணவன், சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

தாலியை அபகரித்த நபர், அம்பாறை வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார். 

விபத்தில் பெண்ணின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கான சிகிச்சையும் பிள்ளை மற்றும் ஆசிரியருக்கான சிகிச்சையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார்,  பறிக்கப்பட்ட தாலியை மீட்டு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .