2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புதிய நகரத்திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், அஸ்லம் மௌலானா,எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கல்முனையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தை எதிர்த்து அங்கு இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கமும் விவசாயிகள் அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், உத்தேச புதிய நகர அபிவிருத்தி திட்டத்தினால் பாதிப்படையக்கூடிய பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

கல்முனை தரவைப் பிள்ளையார் கோவில் முன்றலிலிருந்து பேரணியாகச் சென்றோர், கல்முனை மாநகர முதல்வருக்கு முகவரி இடப்பட்ட மகஜரை மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகஸ்தர் நளீம் எம்.பதுர்தீனிடம் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து பேரணியாக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம் மற்றும் தமிழ்ப் பிரதேச செயலகத்துக்குச் சென்று அவ்வப் பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களை பேரணியில் ஈடுபட்டோர்  கையளித்தனர்.

'இத்திட்டம் இங்கு வாழ்கின்ற மூவின மக்களுக்கிடையில் சமூக, கலாசார பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும், விவசாயத்தை நாசம் செய்யும், அரியவகை மீனினங்கள், பறவைகள், உயிர்ப் பல்வகைத்தன்மை அழிந்து போகும், பாரிய வரலாற்றுக் கிராமமான துரவேந்தியமடு கிராமம் அழிந்து போகும், 1059 குடும்பங்களைச் சேர்ந்த நன்னீர் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்' போன்றவை எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

'வாழ்வாதாரத் திட்டங்களை அழிக்கும் புதிய நகர மயமாக்கல் திட்டத்தை எதிர்க்கிறோம்' என எழுதப்பட்ட பதாதைகளையும் பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன், டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X