Princiya Dixci / 2020 நவம்பர் 18 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.அறூஸ்
பொத்துவில் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸித் தலைமையில் இன்று (18) நடைபெற்றது.
இந்த அமர்வின் போது அடுத்தாண்டுக்கான நிதியறிக்கையை, தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸித் சபையில் சமர்ப்பித்தார். தவிசாளர் உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, வாக்களிப்பில் 21 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். நிதியறிக்கைக்கு ஆதரவாக 10 உறுப்பினர்களும், எதிராக 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் காரணத்தால் மேலதிக ஒரு வாக்கினால் பொத்துவில் பிரதேச சபையின் நிதியறிக்கை தோற்கடிக்கப்பட்டது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான ஆறு உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் நிதியறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பான 4 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர்.
அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஓர் உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஓர் உறுப்பினரும், சுயேட்சைக் குழுவொன்றின் ஓர் உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தனர்.
பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆளுகைக்குள் இருக்கின்ற ஒரு சபையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .