2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’முஸ்லிம் அரசியலின் ஆளுமைக்கு பேராபத்து’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

மர்ஹும் அஷ்ரபின் மறைவுக்கு பின்னர், முஸ்லிம் அரசியலின் ஆளுமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மர்ஹும் அஸ்ரப்பின் 17ஆவது நினைவு தினக் கூட்டம், சனிக்கிழமை (16) இரவு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பெருந் தலைவர் அஸ்ரப் தமது கொள்கை, இலட்சியத்துக்காக வியூகங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வந்துள்ளார். அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மூலம்தான் அடிமட்டத்தில் உள்ளவர்கள் மக்கள் பிரதிநிதியாக முடியும் என்று நம்பினார். ஐ.தே.கவின் மேட்டுக்குடி அரசியல் போக்கை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அவர், சுதந்திரக் கட்சியில் இணைந்து சில காலம் அரசியல் செய்தார். அங்கு முஸ்லிம்களை அபிலாசைகளை, இலட்சியங்களை அடைந்து கொள்ள முடியாது எனக் கண்டார். பின்னர் தமிழ்த் தேசியத்துடன் இணைந்து செயற்பட்டார். அண்ணன் அமீர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத் தராது போனால் தம்பி அஸ்ரப் தமீழீழத்தைப் பெற்றுத் தருவேன் என்று சொன்னார். தமிழ், முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு உழைத்தார்.

“தமிழ்த் தேசியவாதம் இனவாதமாக உருவாகி வன்முறையை நோக்கிச் சென்ற போதுதான் தலைவர் அஸ்ரப், முஸ்லிம்களுக்கும் தனித்துவமானதொரு அரசியல் கட்சி அவசியம் என்றும் உணர்ந்தார். இதன் மூலம்தான் முஸ்லிம்களின் தேசியத்தை அடைந்து கொள்ளலாம் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார். இவ்வாறு தமது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாது வியூகங்களை மாற்றியமைத்துக் கொண்டு வந்த அரசியல் படி முறைகளை நாம் அவதானிக்கலாம். இதனால்தான் தலைவர் அஸ்ரப் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தபோதிலும், மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினார். மாகாண சபையில் முஸ்லிம்களின் குரல் இருக்க வேண்டுமென்று எண்ணினார்.

“அவர் முஸ்லிம் சமூகத்தின் இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணியை அமைத்தார். அதற்காக நிதியம் ஒன்றையும் ஆரம்பித்தார். தீகவாபி விவகாரத்தில் சோம தேரருடன் தொலைக்காட்சி ஒன்றில் விவாதித்தார். அதில் வெற்றியும் கண்டார். இந்தப் பின்னணியில் அவரின் மரணம் இடம்பெற்றது. அவரின் மரணம் பற்றி விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. அக்குழு மூன்று மாதங்களுக்கள் தமது அறிக்கையை பூர்த்தி செய்தது. ஆனால், இன்று வரைக்கும் அறிக்கை வெளியாகவில்லை.

“ஆயினும், அவரின் மரணத்துக்குரிய காரணத்தை அறிந்து கொள்வதோடு, தாருஸ்ஸலாமை மீட்டெடுத்து முஸ்லிம் தாய்மார்களின் காலடியில் வைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். எமக்கு அச்சமில்லை. குற்றவாளிகளக உள்ளவர்களுக்கு செயலாளர் பதவியும், பிரதித் தலைவர் பதவியும் வழங்கி உள்ளார். கடந்த 13ஆம் திகதி தாருஸ்ஸலாம் வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதில் பலர் மாட்டிக் கொள்ளவுள்ளார்கள். மறைந்த தலைவரின் சிந்தனை படி முறைகளில் நாங்களும் தவறுகளைச் செய்துள்ளோம். ஆயினும், அவற்றை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அதனைச் செய்யும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும்” என்றார்.

மேலும், “இன்று அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் தமிழ், முஸ்லிம் தேசியங்கள் பலியாகியுள்ளன. இன்று முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று கேட்கின்றர்கள். ஒன்றுமை என்பது ஒரு தேர்தலின் மூலம்தான் ஏற்படும். அப்போதுதான் நாங்கள் ஒற்றுமைப்பட்டு விட்டோம் என்று காட்ட முடியும்.

“மாகாண சபை தேர்தல் அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எது வந்தாலும், அத்தேர்தலில் அஸ்ரப்பின் கொள்கைளை அழித்த, அவரின் சிந்தனைகளை குழி தோண்டிப் புதைத்து தூய முஸ்லிம் காங்கிரஸை தீய முஸ்லிம் காங்கிரஸாக மாற்றியமைத்துள்ள இந்த தீய சதி காரர்களi ஓடவோட விரட்டி அடிக்க வேண்டும்.

இன்று ரணிலின் வலையில் மாட்டியுள்ளார்கள். 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு என்ன நடக்குமென்று அவருக்கு தெளிவாகவே தெரியும். ரணிலை யாரும் சாதாரணமாக கணிக்க முடியாது. ரணிலின் முன் மூலை அரசியல், பின் மூலை சட்டம், நடு மூலை பொருளாதாரம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மயக்க வேண்டுமென்பதற்காகவும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்திருக்கலாம். ஏற்கெனவே ரணில், தமிழ்த் தேசியத்துக்குமிடையே புரிந்துணர்வு இருக்கின்றது. ஆனால், அதில் முஸ்லிம் தேசியம் கிடையாது.

“சர்வசன வாக்கெடுப்பு வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் சிங்கள தேசியத்திற்கும், தமிழ்த் தேசியத்துக்கும் வெற்றிதான். ஆனால், முஸ்லிம் சமூகத்துக்கு எது நடநதாலும் பாதிப்புத்தான். புதிய அரசமைப்புப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். புதிய அரசமைப்பு தயாராகவே உள்ளது. இப்போது பேசிக் கொண்டிருப்பது நாடகமாகும்.  இதற்கிடையே, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாங்கள் திரைமறைவில் பேசிக் கொண்டிருக்கின்றோம். அவற்றை வெளியில் சொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் ஒரு விடைதான் இருக்கின்றது. அதாவது, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், முஸ்லிம் சமூகத்தின் மீது பற்றும், சுயநிர்ணயமும் உள்ளவாகளை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும். இன்று அரசியலில் உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தீய காங்கிரஸை ஒளிக்க வேண்டும். அப்போதுதான் அஸ்ரப்பின் கொள்கைகள் வாழும்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .