2025 மே 08, வியாழக்கிழமை

முஸ்லிம் சட்டம்:திருத்தும் உரிமை முஸ்லிம் சமூகத்திற்கே உரித்து

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா  

 இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் தனியார் சட்டம் ஷரீஆ சட்டமாக அமையாது. அது ஷரீஆவை தழுவிய முஸ்லிம்  சமூக நடவடிக்கைகள், பாரம்பரியம்  பழக்க வழக்கங்கள் போன்றனவற்றை உள்ளடக்கியதாகும். இது மாற்றப்படாமல் இருந்து வருகின்ற ஒன்றல்ல. அது காலத்திற்குக் காலம் மாற்றம் பெற்றே வந்துள்ளதெனத் தெரிவித்த சிரேஷ்ட சட்டத்திரணி எம்.எம்.பஹீஜ் , இது எப்படி திருத்தப்பட வேண்டும். எந்த அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற முழு உரிமையும் முஸ்லிம் சமூகத்திற்கே வழங்கப்பட வேண்டும் என அவர்  இன்றுவிடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள், பாரம்பரியம் அல்லாத முஸ்லிம்கள் என்றும், தௌஹீத்வாதிகள், தௌஹீத்துக்கு எதிரானவர்கள் என்றும் இன்னுமொரு வகையினருக்குள்ளும் முஸ்லிம்களைப் பிரித்தாள முட்படுவது வேடிக்கையான விடயம். இதேவேளை,முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பதவிகளைப் பறித்து, முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்ற இச் சூழ்நிலையில் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தை தற்போது அனுமதிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
  கடந்த 10 ஆண்டுகாலமாக முஸ்லிம் தனியார் சட்ட விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கின்றது. அது தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் எங்களுக்கான இறைமை உள்ளது. எங்களை ஆளுவதற்கான சுயநிர்ணய உருத்தும் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம் எப்படி திருத்தப்பட வேண்டும், எதன் அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற முழு உரிமையும் முஸ்லிம் சமூகத்திற்கே வழங்கப்பட வேண்டும்.
  12ஆம் நூற்றாண்டில் இந்நாட்டில் நடைமுறையில் இருந்த சிங்கள நீதிமன்றங்களில் கூட முஸ்லிம்களின் வழக்காடல்கள், இஸ்லாமியர்களின் அடிப்படை பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட்டு அதற்கு சட்ட அங்கிகாரம் வழங்கப்பட்டிருப்பதனால் இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான அங்கிகாரம் இருந்துள்ளதனை அறிய முடிகின்றது.
 தற்போது முஸ்லிம் சமூகத்தினுடைய அச்சம், முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கப்படுமா அல்லது மாற்றம் செய்யப்படுமா என்பதுதான்.  முஸ்லிம் சட்டத்தை நீக்குவதானால் கண்டிச் சட்டத்தையும், தேசவழமைச் சட்டத்தையும் நீக்க வேண்டும். இவைகளை நீக்குவதற்கான சாத்தியம் இலங்கையில் இல்லை. இந்த நாட்டிலுள்ள சட்ட சூழ்நிலையிலும் நீக்குவதற்கான சந்தர்ப்பம் இல்லையெனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X