2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’யானைத் தாக்குதல்களால் இவ்வருடம் ரூ.3.5 மில். செலவு’

வி.சுகிர்தகுமார்   / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

"அம்பாறை மாவட்டத்தில், காட்டு யானையின் தாக்கத்தால், வருடமொன்றுக்கு 10 தொடக்கம் 20 வரையான மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதுடன், 200 வீடுகள் வரை சேதமடைகின்றன. இதற்கான நட்ட ஈடாக, அரசாங்கம் இவ்வருடம் 3.5 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளது" என, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பி வணிகசிங்க தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை வினைத் திறன் மிக்கதாக மாற்றுதல் மற்றும் மக்களுக்குத் தகவல்களை வழங்குவது தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களைத் தொடர்புபடுத்துவதற்கான செயலமர்வு, அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மொண்டி விடுதியில் நேற்று (14) நடைபெற்றது.

இச்செயலமர்வில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "அனர்த்தமொன்று நடைபெற்ற மாத்திரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செல்வதற்கு முன்  அவ்விடத்துக்கு முதலில் சென்று செய்தியை வெளிக்கொண்டு வருவது ஊடகவியலாளர்களே. அந்த வகையில் அவர்களின் சேவையை பாராட்டுவதுடன் நன்றியும் கூறுகின்றேன்" என்றார்.

இதேவேளை, அம்பாரை மாவட்டத்தில், 208 கிராமசேவகர் பிரிவுகளில் வாழும் 29,000ஆயிரம் குடும்பங்கள் வரட்சியால்  பாதிக்கப்பட்டுள்ளன என்றும் 170 கிராமங்களுக்கு வரட்சி நிவாரணமும் 70 கிராமங்களுக்கு குடிநீர்  வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்ட அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏஎஸ்எம்.சியாத் அரசாங்கம் இதற்காக 160மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.

ஊடகவியலாளர்கள் எப்போதும் அனர்த்தம் தொடர்பில் நேர்மறையான கருத்துக்களை வெளியிட வேண்டும் எனவும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு மக்களை பீதி அடைய வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்புலி இங்கு குறிப்பிட்டார். 

இச்செயலமர்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டதுடன் குழுச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .