2024 மே 04, சனிக்கிழமை

வட, கிழக்கில் விஹாரைகள்; த.தே.கூ ஆதரித்தது

Princiya Dixci   / 2022 மே 16 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

வடக்கு மற்றும் கிழக்கில் 1,000 விஹாரைகளை கட்டுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்ணை மூடிக்கொண்டு  ஆதரவு வழங்கி இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள், நேற்று (15) நினைவுகூரப்பட்டது.

இதன்படி, முள்ளிவாய்க்கால் கஞ்சியை  நினைவுகூறும் நிகழ்வொன்று,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அம்பாறை - வீரமுனை பகுதியில் உள்ள  நினைவுத்தூபிக்கு முன்பாக நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த தர்மலிங்கம் சுரேஸ், “ரணிலின் கடந்த கால நரித்தனமான போக்கு  எமது மக்களுக்கு நன்கு தெரியும். அவர் எமது மக்களை மெது மெதுவாக கருவறுப்பார்.

“இவரது ஆட்சிக்காலத்தில் எமது மக்களை மிக மோசமான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கடந்த நல்லாட்சியிலும் கூட வடக்கு மற்றும் கிழக்கில் 1,000 விஹாரைகளை கட்டுவதாக இவர் தனது  தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

“இதற்கு கண்ணை மூடிக்கொண்டு, குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி இருக்கின்றது. அதன் பின்னர் ஏனைய அரசாங்கமும் இச்செயற்பாட்டை தொடர்ந்து வந்தது.

“கடந்த வாரம் கூட வடக்கில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஒரு விஹாரைக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோன்று, பொன்னாலை மற்றும் ஊர்காவற்றுறை போன்ற இடங்களில் தனியார் காணிகள் பறிக்கப்பட்டு, இராணுவ முகாங்கள் அமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டிருந்தார்கள்.

“இவ்வளவு பஞ்சம், பட்டினியான காலங்களிலும் கூட சிங்கள தேசிய வாதத்தினரின் மனோ நிலை மாறவில்லை. அவர்கள் கட்டமைப்பு சார் இனவழிப்புகளை மேற்கொள்கின்றார்கள். ஆகவே, எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .