Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆதிக்க வெறியும் பெண் உரிமை மறுப்பும் பேசும் ஆண்களைக் காணும்போது, இப்போதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது. இவர்களை எது இப்படியே வைத்திருக்கிறது என்றே யோசிக்கிறேன். அல்லது இவர்கள் இப்படியே இருக்க விரும்புகிறார்களா என்றும் தோன்றுகிறது. பெண்கள் எப்போதுமே விடுதலை உணர்வும் ஓர்மமும் (மன உறுதி) நிரம்பியவர்கள். அவர்கள் ஒரே விதமாக இருப்பதை விரும்பியதேயில்லை. அவர்கள் மாற்றங்களை விரும்புகிறார்கள். அந்த மாற்றங்களில் மகிழ்ச்சியைத் திருப்தியை, தீர்வுகளைத் தேடுகிறார்கள். சாகசங்களை விரும்புகிறார்கள். தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள். வெற்றிகளை ஏற்கிறார்கள். ஆண்கள் சொல்லித் திரிவதுபோலப் பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் இல்லை. அவர்கள், அன்பையும் அதிகாரத்தையும் கையாளத் தெரிந்தவர்கள். அவர்கள் ஏமாறக்கூடியவர்களாக இருக்கலாம். ஏமாளிகளாகவே இருப்பதில்லை. இந்த ஆண்களைப் பாருங்கள்! போரும் சண்டையும், ஆக்கிரமிப்பும், அடக்குமுறையுதான் வரலாறு. உலகம் தோன்றியதிலிருந்து அப்படியேதான் இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணால் எப்படியெல்லாம் மாற்றங்களை உருவாக்கவும் தீர்வுகளைத் தரவும் முடியும் என்பதை எனது குடும்பப் பெண்களில்தான் முதலில் பார்த்தேன். இந்த நிலையை பெண்கள் அடைய, பொருளாதாரம் தேவையாக இருக்கிறது. பெண்ணுக்குப் பொருளாதார பலம் தரக்கூடிய சுதந்திர உணர்வையும் மனத்திடத்தையும், தைரியத்தையும் உலகின் வெளிச்சம் என் மீது படுவதற்கு முன்பாகவே நான் கண்டது, எனது உம்மாவிடமும் உம்மம்மா இருவரிடமும்தான்.
1960களில் ஸ்ரீமாவோ பண்டாராநாயக்க, கணவனையிழந்து விதவையானார். அவரது விதவை நிலை, அவரை சாதாரண பெண்கள் எதிர்கொள்வது போன்ற துன்பகர நிலைக்கு இட்டுச் செல்லவில்லை. பதிலாக, உலகின் முதல் பெண் பிரதமர் அந்தஸ்த்தைக் கொடுத்துக் கௌரவப்படுத்தியது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தனது பிள்ளைகளோடு தனியாக நின்ற அதே காலத்தில்தான், எனது உம்மம்மா சகர்வான், நான்கு பெண் மக்களோடு கணவனால் கைவிடப்பட்டுத் தன்னந்தனியாக நின்றார். வெயிலிலும் மழையிலும், இரவிலும், பகலிலும் உழைத்துத் தனது மக்களுக்குக் குறைந்தபட்சம் ஒருவேளை உணவையாவது கொடுத்துவிட வேண்டும் என்று பாடுபட்டார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு இருந்த சமூக அந்தஸ்த்து, குடும்பப் பின்னணி என்பன, அவருக்கான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், அதுவேதான் அவரது சாதாரணத்தையும் அசாதாரணத்தையும் தீர்மானிக்கும் வாய்ப்பாக அமைந்தது. மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்து, சிறு பராயத்திலேயே பெற்றவர்களையும் இழந்து, ஒருவேளை உணவுக்கே மல்லுக்கட்டிய எனது உம்மம்மா சகர்வான், இளமைப் பருவத்திலேயே தனிப்பெற்றோராக நான்கு பெண் மக்களை வளர்த்து, சமுதாயத்தில் அவர்களையும் நற்மக்களாக ஆக்கினார் என்கிற பெருமைக்கும் கர்வத்துக்கும், ஸ்ரீமாவின் பெருமைக்கும் இடைவெளிகள் இல்லை.
எல்லோரும் நினைப்பதுபோல, பண்டாரநாயக்க இறந்ததால் மட்டுமே ஸ்ரீமாவோ பிரதமராகவில்லை. அந்தப் பதவியை நிர்வகிப்பதற்கான முழுமையும் அவரிடமிருந்தது. ஆண்கள் நிரம்பியிருந்த சபையில், கையுயர்த்தி அமைதி ஏற்படுத்தும் மனபலம் அவருக்கிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, மேலும் இரண்டு முறைகள் தேர்தலில் வென்று, தனக்கென்று ஒரு வரலாற்றையே படைக்கும் வல்லமை இருந்தது.
எனது உம்மம்மா, கையெழுத்தைக்கூடத் தனது சொந்தப் பிள்ளைகளிடமிருந்துதான் கற்றார். அவரின் ஓர்மைத் திறனும் சுய கௌரவமும், அவரை உயர்த்தியதன் பெறுபேற்றைக் கண்ணாரக் கண்டு வளர்ந்தவள் நான். யாரிலும் தங்கி நிற்காத அவரது சுயத்தைக் கொண்டே, அவர் ஓர் எஜமானியைப்போல தன்னை நிலைநிறுத்தியிருந்தார்.
உம்மம்மாவைப் போல உம்மாவும் கடின உழைப்பாளி. ஓர்மம் நிரம்பியவர். கணவன் இலட்சாதிபதி. கணவனின் உழைப்பை அனுபவித்து மினுக்கித் திரிவதில் உம்மா ஒருபோதும் மகிழ்ந்ததில்லை. தனது சுயத்தை நிலைநிறுத்தும் உழைப்பாளியாகவே இருக்க விரும்பினார். நாள் சம்பளம் 500- 600 என்பது, அப்போது எங்களுக்கு அவசியப்படாத ஒரு பெறுமதியாக இருந்தபோதும், பொருட்படுத்தாமல் உழைத்தார். எதிர்பாராத நோயாலும் வியாபார இழப்புகளாலும் வாப்பா கையறுந்தபோது, உம்மாவின் அந்த சிறு உழைப்பும் சேமிப்பும்தான் குடும்பத்தைத் தாங்கியது.
எனக்குத் திருமண வாழ்க்கை நிம்மதியாக அமையாமல், எல்லாம் கைமீறிப்போன ஒரு நாளில், குழந்தையும் கையுமாக வீடு திரும்பியபோது, குடும்பத்தவர்கள் எல்லாரும் வாழ்வு இப்படியாகிட்டே, வாழும் வளரும் வயது என்றெல்லாம் சூழ இருந்து அழுது புலம்பினார்கள். குழந்தையோடு நானும் செய்வதறியாது கலங்கி நின்றேன்.
“சும்மா ஒப்பாரி வைக்காம போங்க எல்லாரும்...” என்று விரட்டி விட்டபோது, உம்மாவை அவ்வளவு பிடித்தது எனக்கு. அன்று அவர் ஒரு தாயாக அல்ல, தோழியாகத் தெரிந்தார்.
அந்தஸ்த்து கருதி விவாகரத்துக்கு வாப்பா விரும்பவில்லை. போலி கௌரவத்தை வைத்து நாக்கு வழிக்கவா முடியும் என்று உம்மாதான் கேள்வி எழுப்பினார்கள். “நீ நல்லா வாழணும் மகள்” என்று தலையைத் தடவிக்கொண்டே இருந்த வாப்பாவுக்கு, எனது விடுதலையையும் நிம்மதியையும்விட அந்தஸ்த்து முக்கியமாகத் தெரிந்தது. சுய கௌரவத்தோடும் கம்பீரத்தோடும், ஊரின் தெருக்களை கிளசரியாப் பூக்களுக்கு அடுத்தபடியாக அலங்கரித்துத் திரிந்தவள், என்னை இளமையில் பார்த்து மகிழ்ந்த பெண்கள் யாருமே என்னுடைய விவாகரத்துக்கு மறுப்புச் சொல்லவே இல்லை. எனது சுயத்தை இழந்த இயல்பான கொண்டாட்டங்களைத் தொலைத்த வாழ்வை எண்ணி அவர்கள் அதிர்ச்சி கொண்டிருந்தார்கள். எப்படியாவது இந்தத் திருமண பந்தம் எனும் கொடுஞ் சிறையிலிருந்து என்னை காப்பாற்றிவிடவே பெண்கள் விரும்பினார்கள்.
இன்று, அபிவிருத்தியும் தொழில்நுட்பமும் எல்லாவற்றையும் வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்து சேர்க்கும் காலம். பெண்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டதென்ற கூப்பாடுகள் ஒருபக்கம். ஆனாலும், பெண்களின் சுயம், கௌரவம், தீர்மானிக்கும் உரிமை என்றெல்லாம் பேசுவதைப் பெண்ணியக் கொள்கை, மேலைத்தேயக் கலாசாரம் என்கிறார்கள். ஆண்கள் சொல்வதைக் கேட்பதும், அடக்க ஒடுக்கமாகப் பேசி ஒதுங்கியிருப்பதும்தான் பெண்களுக்கான கலாசாரம் என்கிறார்கள்.
எனது உம்மம்மாவோ, உம்மாவோ, பள்ளிக்கூடம் போனவர்வர்கள் இல்லை. அவர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் எதுவும் செய்தவர்களில்லை. அவர்களுக்கு மேலைத்தேய கலாசாரம், பெண்ணியம், சூனியம் எதுவுமே தெரியாது. ஆனால், அவர்கள் பெண்களாக இருந்தார்கள். சுயமரியாதைமிக்கவர்களாக இருந்தார்கள். தங்களது சுயத்தை இழக்காத கௌரவமான வாழ்வை வாழ்ந்தார்கள். அவர்களிடமிருந்துதான் நான் சுயமரியாதையைக் கற்றேன்.
சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான தந்தை பெரியாரையெல்லாம், அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஏன், பாரதியார் என்றொரு பெண்ணுரிமைப் புரட்சிக் கவிஞர் இருந்தார் என்றுகூடத் தெரியாதவர்கள் அவர்கள். யன்னலுக்கு வெளியே உலகம் எப்படிப் புலர்ந்து மறைகிறது என்று தெரியாத காலத்திலேயே, அவர்கள் பெண்களாக இருந்தார்கள். துணிந்து தீர்மானங்கள் இயற்றினார்கள். எனது உம்மாவும் உம்மம்மாவும், நான் பார்த்த எனது அனுபவங்கள். இவர்களைப் போல இலட்சம் கோடிப் பெண்களை இப்போது சொல்ல முடியும்.
ஒரு பெண்ணின் ”ஒளி” எத்தகையதெனினும், அவளுக்குள்ளேயே முடங்கிப் போவதில்லை. அது சந்ததி சந்ததியாகக் கடந்துப் பயணிப்பது. அந்தப் பயணத்தை ஒரு பெண்ணின் சுயம் தான் தீர்மானிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
04 May 2025