Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டாள்; விலக்கப்பட்ட கனியைத் தான் உண்டுவிட்டு, ஆதாமையும் உண்ணுமாறு கட்டாயப்படுத்தினாள் அதனாலேயே சுவனத்திலிருந்து இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள்’.
ஆகவே, பெண் சுமந்து கொண்டிருப்பது கிளர்ச்சியூட்டக்கூடிய உடல் மொழியை மட்டுமே அறிவுத்தனத்தை அல்ல போன்ற புனைகதை முடிவுகளினூடாக வரலாற்றையும், அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டார்கள் ஆண்கள் அல்லது அதிகார உடல்கள்.
மதங்களின் பெயராலான ஒழுக்க விதிகளின் நிற போதையில் பெண்ணுடல்களுக்குக் கலாசாரப் பாதுகாவலர்களாய் ஆண்கள் தங்களைத் தாங்களே முன்னிறுத்திக் கொண்டார்கள். வெவ்வேறு கலாசாரப், பண்பாட்டு, மத, அரசியல், அறிவியல் பின்னணி கொண்ட ஆண்கள் அல்லது அதிகார உடல்கள் அவரவர் தேவைக்கேற்ற மாதிரி பெண்களை வடிவமைத்தனர்.
தேசியம், சமூகம், இனக்குழு, மதம், பண்பாடு, ஒழுக்கம், போன்ற அதிகாரப் புனைவுக்குள் விரும்பியோ விரும்பாமலோ பெண் நிர்ப்பந்திக்கப்பட்டாள். அதை ஓர் இயற்கையாக, இயங்கியான உலகம் ஏற்றுக்கொண்டது. தொழில் நுட்பம், அரசியல், பொருளாதாரம், இலக்கியம், கலை, சினிமா, விளம்பரம், அழகுராணிப் போட்டிகள் எல்லாமே இந்த வரலாற்று மரபிலிருந்துதான் கைமாற்றம் செய்யப்பட்டன.
இப்படி வரலாற்றைக் கலைத்துச் சரி பார்ப்பதன் ஊடாகத்தான் உடலையும் அதிகாரத்தை வெளிப்படுத்துகின்ற உடலையும் அது செயற்படுகின்ற உடலையும் அது சமரசம் செய்யும் உடலையும் அடங்கிப்போகின்ற உடலையும் எதிர்க்கின்ற உடலையும் வலைப்பின்னல் உறவுகளையும் நாம் புரிந்து கொள்ள முடியும். உடல்கள் பல பின்னணிகளில் பல தரப்பட்ட விடுதலைகளை வேண்டி நிற்கின்றன.
ஓர் உடல் புனையப்பட்ட ஆண், பெண் என்ற இரண்டு மொத்தத் தத்துவத்துக்குள் ஏதாவதொன்றுக்குள் தான் தன்னை அடையாளம் காண வேண்டும் என்பது ஒரு பொதுப்புத்தி. யோனி, கர்ப்பப்பை, மார்பகம் போன்ற உறுப்புகளை மய்யப்படுத்தி ஒரு மொத்த தத்துவத்துக்குள் உடலை, அதன் வெளிப்பாட்டை, அதன் தன்மையை நிரந்தரப்படுத்துவது சாத்தியமா?
உடல் சதை, எலும்புகளால் ஆனவை என்பதை விட மொழி என்கின்ற விளையாட்டுகளால் ஆனது என்பதே பொருந்தும்.
மொழி பல்வேறுபட்ட அர்த்தங்களைத் தாங்கி நிற்பது போன்று பல்வேறுபட்ட அதிகாரங்களையும் தாங்கி நிற்கின்றது. இந்த அதிகார பொதுமைகளை உருவாக்குகின்றது. பொதுமைகள் உண்மைகளாக மாறுகின்றன.
உண்மைகள் அதற்குப் பொருந்திப் போகாதவற்றை வேறுபடுத்துகின்றன அல்லது தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறன அல்லது அழித்தொழித்து விடுகின்றன. இந்த வன்முறையில் நிகழ்ந்த இரக்கமற்ற தன்மையைத்தான் நாம் ஒழுக்கம், புனிதம், மேன்மை, தியாகம், கடமை என்று கொண்டாடுகின்றோம்.
மொத்தத்துவம் கட்டமைத்து வைத்திருக்கின்ற அர்த்தங்கள் எல்லாமே வன்முறைகள்தான். பெண், பெண்குறி, கற்பு, பெண்மை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, குடும்பம், மனைவி, காதலி எல்லாமே அதிகார வார்த்தைகள்தான்.
மத அமைப்பியல் வாதமோ, பண்பாட்டு வாதமோ ஆணுடல்களை கற்பித நெருக்கடிகளுக்குள் ஆக்குவதில்லை.
அதன் நடைமுறை விளைவுகளைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறாள். இதனால் ஆண் உடல்கள் அல்லது அதிகார உடல்கள் நிர்மாணித்த சமூக உளவியல் அவளுக்குப் பழக்கப்படுகிறது.
-றபியூஸ் எம்.எம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago