2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெட்கம் தவிர்; நாணமறு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்ற வாரம், உறவினர் ஒருவருக்கு வட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பை எடுத்தேன். உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பைப் பேணுவதென்பது, இந்தக் கால வாழ்க்கைச் சூழலில் அத்தனை எளிதானதில்லை. எப்படியோ கிடைத்த ஒரு நேரத்தைப் பிடித்து முன்கூட்டியே அறிவித்துவிட்டு வீடியோ அழைப்பை ஏற்படுத்தினேன்.

அவர்களின் மகளுக்கு ஏழே வயதுதான். அவள் எங்கே என்று நான் பலமுறை கேட்டிருந்தும் அவள் தொடர்பில் வரவில்லை. அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும்.

அவ்வப்போது அவளே குரல் பதிவு செய்து வட்ஸ்அப்பில் அனுப்பிவைக்கின்றளவு என்னோடு நெருக்கம். அவள் எதிரே வரத் தயங்கியது சங்கடமாக இருந்தது.   

அவள் எதிரே வரத் தயங்கியது அவள் கைகளில்லாத (Sleeveless)  சட்டையை அணிந்திருந்ததுதான் காரணம் என்று தெரிந்தபோது பெருத்த கவலையாகிவிட்டது. “நானும் கைகளில்லாத சட்டை போடுவேன். எனக்கும் பிடிக்கும். வா, பார்க்க” என்று அவளை எதிரே வரவழைக்கப் பெரிய சிரமப்படவேண்டியதாகப் போய்விட்டது.

“கைகளில்லாத சட்டைதானே, அதுக்கு என்ன” என்று கேட்க, உடனே “வெட்கம்” என்று பதிலளித்து, முகத்தைத் தாயின் பின்னால் மறைத்துக் கொண்டாள்.

“நாணமும் வெட்கமும் நாய்கட்கு வேண்டுமாம்” என்று நூறாண்டுகளுக்கு முன்பே பாரதியார் பாடியாச்சு. பெண் சுதந்திரம், உரிமை, கௌரவம் என்றெல்லாம் காலங்காலமாகப் பல பெண்களும் ஆண்களும் வாய்க்கிழியப் பேசியும் எழுதியும் இயங்கியுமுள்ளார்கள். இன்னும் இயங்கிக் கொண்டுமிருக்கிறோம். ஆனாலும் ஒரு ஏழு வயதுச் சிறுமி “வெட்கம்” என்று எளிதாகச் சொல்லிப் போகின்ற ஒரு சூழ்நிலையை மாற்ற முடியாமல்தானே  இருக்கிறது.
அவளுக்குள் இந்த வெட்கம் என்ற வார்த்தை எப்படி நுழைந்திருக்கும், எங்கிருந்து கற்றுக் கொண்டிருப்பாள், இந்த வெட்கம் என்ற சொல்லைப் பெண் குழந்தைகள் மட்டும்தான் உபயோகிக்கிறார்களா என்றால், இல்லை. ஆண் குழந்தைகளும் உபயோகிக்கிறார்கள்.

ஆண் குழந்தைகளை விடவும் அவர்களை வளர்க்கும் தாய் தந்தையும் பெரியவர்களும் உபயோகப்படுத்துவதுதான் அதிகம் எனலாம். “பொம்பிளைப் பிள்ளையைப் போல அழுகிறீயே, வெக்கமில்லையா?” என்று ஆண் குழந்தைகளைக் கேட்பது பெரும்பாலான வீடுகளில் சர்வசாதாரணம்.

இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று அழுவது பெண்களின் இயல்பு என்று காண்பிப்பது. மற்றையது அழுவது வெட்கமான செயல் என்பது. அழுகை ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான பொது உணர்வு.

இதில் ஆணின் அழுகை பெண்ணின் அழுகை என்று பால் பிரித்தரிய ஒன்றுமில்லை. அப்படி அழுவதற்காக வெட்கப்படவோ, கூச்சப்படவோ, குற்றவுணர்வு கொள்ளவோ தேவையே இல்லை.

மிக இயல்பான பொது உணர்வுகளின் மீது ஆண், பெண்  பாலின சாயத்தை சத்தமேயில்லாமல் அப்பி குழந்தைகளின் மனத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசங்கள் பதிக்கப்படுகின்றன. ஆண் அழக்கூடாது, பெண் உரத்துச் சிரிக்கக் கூடாது என்றெல்லாம் சம்பந்தமே இல்லாத சட்டங்களை உருவாக்கி விடுகின்றோம்.

இப்படி சமூகமும், கலாசாரமும் உருவாக்கிய தொங்கட்டாண்கள்தான் வெட்கம், நாணம், பயிர்ப்பு போன்ற மண்ணாங்கட்டிகள். இந்த வெட்கம் என்ற உதவாத தொங்கட்டாணை பெண்களின் மேலதிக தகைமைகளில் ஒன்றாகத் தொங்கவிட்டு அழகு பார்த்து வளர்ப்பது வீடுகளில் இருந்து தொடங்கி பாடசாலை, அயல் என்று விரிகிறது. நம் கல்வித் திட்டத்தில்கூட இது போன்ற உதவாதப் பாடங்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

வெட்கம் என்ற உணர்வே கூடாதது என்று சொல்லவில்லை. வெட்கம் என்பதும் மற்றெல்லா உணர்வுகள் போல ஒன்றுதான். அது பெண்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்ட பெண்ணுடமை இல்லை. பொதுவானது. இந்த வெட்கம் என்ற சொல்லை வைத்து பல விளையாட்டுக்கள் நடக்கும். “அவளும் அவள் உடையும், வெட்கங்கெட்டவள்” என்பார்கள். ஒரு பெண்ணோ, ஆணோ தன்னை யார் என்று காண்பிக்கவும், தான் விரும்பியவாறு தோன்றவும் எதற்காக வெட்கப்பட வேண்டும்?

வெட்கம் என்ற உணர்வைப் பெரும்பாலும் எதிர்மறையான பொருளுடன், எதிர்மறையான நோக்கத்துடன் பயன்படுத்துவதுதான் வழக்கத்தில் இருந்துவருகிறது. “மண்டபம் நிரம்ப மக்கள் இருந்தபடியால் அவள் அல்லது அவன் மேடையில் தோன்ற வெட்கப்பட்டான்” என்பார்கள். அது வெட்கம் அல்ல. தயக்கம். வெட்கம் என்பது குற்றவுணர்வுக்குச் சற்று முன்பு அல்லது பின்பு இருக்கக்கூடியது. தடுமாற்றத்துக்குப் பக்கவாட்டில் இருப்பது. நாம் சொல்லி வளர்ப்பதுபோல வெட்கம் என்பது கைகளில்லாத சட்டை அணிவதற்கோ, முட்டிக்கால் தெரியப் பாவாடை அணிவதற்கோ தடையாக இருப்பதில்லை.

கூட்டத்தில் சிரிக்கவும் பழகவும் தன்னை வெளிப்படுத்தவும் தடுப்பதில்லை வெட்கம். தன்னை யாரென்ற சுயத்துடன் அழுத்தமாக வெளிப்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போடுவதல்ல வெட்கம்.

தமிழ் அகராதிகள் வெட்கம் என்பது-  அவமானம், தவறு செய்வ தற்குப் பயப்படுவது, கெட்டச்  செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவது என்று விளக்கம் தருகின்றன.  

தான் விரும்பியபடி உடை அணிவது அவமானத்துக்குரியதோ, தவறானதோ கேடானதோ அல்ல. சிரிப்பதில் மெல்லச் சிரிப்பது, சத்தமாகச் சிரிப்பது, வெடித்துச் சிரிப்பது என்று எதுவாக இருந்தாலும்  வெட்கப்படத் தேவையேயில்லை. அதில் அவமானப்பட ஒன்றுமேயில்லை.  

நாம் இன்னும் சற்று ஆழமாகச் சென்று அவமானம் என்பதைப் பார்த்தோமெனில், அதற்கு முன்பு மானத்துக்கு வரைவிலக்கணம் அறியவேண்டியதிருக்கும். மானம் தெரிந்து கொள்ளாமல் அவமானத்தை எப்படி வரைவிலக்கணப்படுத்த முடியும்? மானம் எது, மானம் என்றெல்லாம் அப்படியே உரித்து உரித்துப் பார்த்தால் முடிவில் எல்லாம் பெண்களின் உடலோடு வந்து முடியும். அதாவது வெங்காயம் உரித்த கதை. அங்கே பொருள் என்று எதுவுமில்லை. எல்லாம் பெண் உடலை வைத்துக் கட்டப்பட்ட மாய வடிவங்கள். கற்பு என்ற கட்டுக் கதையைப் போல.

உண்மையில், அந்த ஏழு வயதுக் குழந்தையின் மண்டைக்குள் வெட்கத்தைப் புகுத்தியதுதான் வெட்கக்கேடானது. இந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகும்போது, ஆண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசுவதற்கு வெட்கப்படும் விதமாகத் தயார்படுத்துவதற்கான அத்திபாரம்தான் இது.

வெட்கத்தில் நாணிக் கோணிக் குனிந்த தலை நிமிராதிருக்கும் பெண்கள்தான் குலக்குத்து விளக்குகள் என்று எழுதப்படாத விதியை திரும்பத் திரும்பச் சொல்லி அப்படியே உண்மையாககி, நமது பெண்களும் இன்னும் நகம் கடித்துக் கொண்டே தலையைக் குனிந்து கால் பெருவிரலால் கோல மாவு இல்லாமலே புள்ளிவைக்கும் கதையை சினிமாக்களில் பார்த்தும் சலித்துவிட்டது.

குழந்தைகளுக்கு வெட்கம் என்ற பிரயோகத்தின் சரியான அர்த்தத்தைச் சொல்லித்தரவில்லை என்றால் கூடப் பரவாயில்லை, வெட்கத்தை எதிர்மறையாகப் புரிந்து கொண்டு அம்மாக்களின் பின்னால் அவர்கள் ஒளிந்து கொள்வதிலிருந்து விடுவிக்க வேண்டும். “நாணமுறு” என்ற வார்த்தையைச் சொல்லி அவர்களைத் தன்னம்பிக்கையற்றவர்களாக வளர்ப்பதைவிட்டுவிட்டு “நாணமறு” (நாணம் +அறு), ”வெட்கம் தவிர்” என்று சொல்லித் துணிவுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .