2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அஜாக்கிரதை இழப்புகளுக்கே வழிசமைக்கும்

Editorial   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்சரிக்கை, எதிர்வுகூறல், சமிக்ஞை உள்ளிட்டவை தொடர்பில் அலட்சியம் செய்யாமல், அதியுச்ச கவனத்தைச் செலுத்தினால், ஏற்படப்போகும் உயிரழிவுகள், பாரிய சொத்திழப்பு, என்பவற்றிலிருந்து ஓரளவுக்கேனும் அரணமைத்துப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கடந்தகாலச் சிவப்பு எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமையால், இயற்கை அனர்த்தங்கள் உட்பட, பல அழிவுகளை நாடு சந்தித்தது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள், மிக அண்மைய உதாரணமாகும். புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும், அத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையென, ஒருவருக்கொருவர் இன்னும் விரல் நீட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நட்டஈடுகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குக் குறைவேயில்லை. அதேவேளை, இந்தத் தாக்குதல்களை, அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிளும் இன்னும் கைவிடப்படவில்லை.

பொது எதிரியை, ஓரணியில் திரண்டு எதிர்க்கவேண்டும். எனினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில் அவ்வாறில்லை. அரசியல் இலாபங்களுக்காகவே இன்னும் பயன்படுத்திக்கொள்வது, வெட்கித் தலைகுனியவைக்கும் செயலாகும்.

இதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தலில் மிகமுக்கிய பிரசார தொனிப்பொருளாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், அமையுமென்பதில் எவ்விதமான ஐயுறவும் இல்லை.

அந்தத் தாக்குதல்களின் பின்னணியை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு அமைத்து, தேடிக்கொண்டிருக்கும் நிலையில், மற்றுமோர் எச்சரிக்கையைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், ஓகஸ்ட் 03ஆம் திகதி விடுத்திருந்தது.

விடுமுறை நாள்களில், மிகக் கவனமாக இருக்குமாறு, நமது நாட்டிலிருக்கும் அந்நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. புலனாய்வில், வலைவிரித்துக் கழுகுக்கண்களின் இமைகளைச் சிமிட்டாது, நோட்டமிட்டுக்கொண்டேயிருக்கும் ​அமெரிக்காவின் இரண்டாம் நிலை ​எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட முடியாது.

தொடர்ச்சியான விடுமுறைகளின் போது, முன்னெடுக்கப்படும் ​பொது களியாட்ட நிகழ்வுகள், கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பெரஹெரா, நல்லூர் திருவிழா உள்ளிட்ட உற்சவ காலங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு தொடர்பில் அதிகூடிய கரிசனையை உரிய தரப்பினர் காண்பிக்கவேண்டும். அதேபோல, மக்களும் எந்​நேரமும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

இயற்கை அனர்த்தங்களை ஓரளவுக்குக் கணிப்பிட்டு, எதிர்வு கூறப்படுவதன் ஊடாக, பாரிய அழிவுகளிலிருந்து முன்கூட்டிய பாதுகாப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எனினும், பயங்கரவாதத் தாக்குதல்களைக் கணிக்கமுடியாது; அனுமானிக்க மட்டுமே முடியும்.

மழை பெய்யப் போவதை எதிர்வுகூற முடியும். ஆனால், பெய்யப்போகின்ற மழையின் அளவை, அச்சொட்டாக எதிர்வு கூறுவதென்பது முடியாத காரியமாகும். அதேபோல, பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை குறித்து, அதிகூடிய கரிசனையைக காண்பிக்க வேண்டும்.

அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை, விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தவேண்டும். அவையாவும் இனங்களுக்கிடையில் சந்தேகத்தை விதைக்காத வகையில் அமையவேண்டுமென வலியுறுத்துகிறோம்.  05.08.2019


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .