Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 நவம்பர் 23 , பி.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது
ஒன்றை அடையவேண்டுமாயின், ஏதாவதொன்றை அர்ப்பணிக்க வேண்டுமென்பர். ஆனால், எவ்வளவுதான் அர்ப்பணித்தாலும் சாதாரண கோரிக்கையையேனும் நிறைவேற்றப்படாவிடில், அம்மக்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகவே இருக்காது.
பல்வேறு தொழிற்றுறைகளைச் சார்ந்தோர் இருந்தாலும் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு, விலை மதிக்கமுடியாதது. இரத்தத்தை அட்டைகளுக்குக் கொடுத்து, வியர்வையை மண்ணுக்கு உரமாக்குகின்றனர். இதற்கிடையில், சிறுத்தைகளும் குளவிகளும் உயிர்களைப் பறித்துக்கொள்கின்றன.
இந்த மக்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பது என்பது, குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. அந்நியச் செலாவணிக்கு ஆகக்கூடுதலான பங்கை அர்ப்பணிக்கும் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளப் பிரச்சினைக்கு இன்னுமே தீர்வுகாணப்படவில்லை.
பட்ஜெட்டின் ஊடாக, அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கலாம்; தனியார் துறையினருக்கு சலுகைகளுக்கான யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; நிவாரணங்களும் கிடைக்காது. பொதுவான விலைக்குறைப்புகளில் ஓரளவுக்குச் சப்புக்கொட்டிக் கொள்ளலாம்; அவ்வளவுதான்.
அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்கவேண்டுமென்ற கோரிக்கை, ஐந்து வருடங்களுக்கு முன்னர் 2015ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு ஓரளவு பச்சைக்கொடி காண்பிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டு பட்ஜெட்டில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டு, ‘ஜனவரி’ என காலவரையறை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை, நேற்றுமுன்தினம் (17) நடத்தியிருந்த தோட்ட முதலாளிமார் சம்மேளம், “ஒரு ரூபாய்” கூட அதிகரிக்கப்படாதென அறிவித்துள்ளது. இந்தச் சம்பளப் பிரச்சினையை, அரசாங்கம் தனித்து நின்று தீர்க்கமுடியாது. அவ்வாறான இயலுமை இருந்திருக்குமாயின், ஐந்து வருடங்களாகக் காத்திருக்கத் தேவையில்லை.
தீபாவளிக்குக் கிடைக்கும்; பொங்கலுக்குக் கிடைக்கும் என, பெருநாள்களைக் கூறிக்கூறியே, ஏமாற்றப்பட்டு இழுத்துவரப்பட்ட தொழிலாளர்கள், இம்முறை ஜனவரிக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். ‘ஜனவரி’யில் சூழ்ச்சி இருப்பதாகவே அறியமுடிகின்றது.
தொழிற்சங்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்படும் சம்பள உயர்வு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு அமல்படுத்தப்படும். இறுதியாக, 2019 ஜனவரி 28இல் கைச்சாத்திடப்பட்டது, 2021 ஜனவரி 28ஆம் திகதியன்று காலவதியாகும்.
அதற்குப் பின்னர், சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை எனும் நாடகத்தில் 1,000 ரூபாய் கோமாளியாகிவிடக்கூடாது. ஏனெனில், ‘ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு’ எனும் சொல்லைக் கேட்டுக்கேட்டே பலருக்கும் காது புளித்துவிட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், அனைவரும் ஓரணியில் நின்று, அதைத் தீர்த்துவைக்க வேண்டும். எதிரணியினரின் யோசனைகளையும் உள்வாங்கி, சம்பளம் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணச் செயற்றிட்டங்களை முன்வைக்க வேண்டும்.
தங்களுடைய இருப்புகளுக்காகத் தொழிலாளர்களை லயன் அறைகளுக்குஉள்ளே அடைத்துவைத்திருக்க வேண்டுமென்ற சிந்தனை, வாக்குகளுக்காகக் கையேந்துவோரின் சிந்தனையைத் தட்டியெழுப்பி இருக்கலாம். அப்படியாயின் அற்ப சிந்தனையைத் தூக்கியெறிந்து, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விலும் ஒளியேற்றவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
(18.11.2020)
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago