2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலகுவாக நுழைந்துகொண்ட ‘ஐஸ்’

Editorial   / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர் சமுதாயத்துக்குள் இலகுவாக நுழைந்துகொண்ட ‘ஐஸ்’

நமது நாட்டைப் பொறுத்தவரையிலும் நாலாபுறங்களும் கடலால் சூழ்ந்திருப்பதால், சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஒரு மையமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதனால்தான், கடற்கண்காணிப்பில் ஆகக்கூடுதலான கரிசனையை காண்பிக்க வேண்டியுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகமும் எமது நாட்டை ஒரு கேந்திரமாகப் பயன்படுத்துவதை, அண்மைக் காலங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் எண்ணிக்கையைப் பார்க்குமிடத்து தெட்டத்தெளிவாகின்றது. கடலால் சூழ்ந்து, மிதந்து கொண்டிருக்கும் நாடெனக் கூறுவதற்கு முன்பதாக, போதையால் மிதக்கும் நாடெனக் கூறினால் தப்பேதுமில்லை!

பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேலிருந்து, கீழே விழுந்த 15 வயதான மாணவன், ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது பிரேத பரிசோதனைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆக, மாணவர் சமூகத்தைச் சீர்குலைக்கும் வகையில், போதைப்பொருள் விநியோகம் மிகநாசுக்காக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில், பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் நண்பர்களும் மிகக் கவனமாக இருக்கவேண்டும். போதைப்பொட்களைப் பயன்படுத்தி, அடிமையாக்க செய்யும் வர்த்தகர்களின் வலைக்குள், தங்களுடைய பிள்ளைகள் மட்டுமன்றி, ஏனைய பிள்ளைகளும் விழுந்துவிடக்கூடாது என்பதில் விழிப்பாக இருக்கவே வேண்டும்.
வாழவேண்டும் என்பதற்கு அப்பால், சமூகத்தைப் போதைக்குள் தள்ளாடவிட்டு, முதலையைப் போல ஒரே வாயில் கௌவிக்கொள்ள நினைக்கும் சமூக விரோதக் கூட்டங்களை, இனங்கண்டு கொள்வது முக்கியமானது. அதனூடாகவே, போதைக்குள் விழுந்துவிடாது சமூகத்தைக் காப்பாற்ற முடியும்.

போதைப்பொருளை, ஒரு தடவையாவது  பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் பெருந்தொகையைச் செலவழித்து, கொள்வனவு செய்யவேண்டும். முதலிரண்டு நாள்களில் இலவசமாக வழங்கப்பட்டு, போதையேற்றியதன் பின்னர், பணத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அறியமுடிகின்றது. போதையில் மிதக்கப் பழக்கப்பட்டவர்களுக்கு, அப்போதைப்பொருள் கட்டாயமாக ஒவ்வொரு நாளும் தேவைப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், திருட்டு, கொலை, கொள்ளை, அபகரிப்பு  உள்ளிட்ட குற்றச் செயல்களிலும் அவ்வாறானவர்கள் ஈடுபடுவார்கள், பெறுமதியான எவையும் கிடைக்காவிடின், படுகொலை செய்து அபகரித்துச் செல்லமுயல்வர்.

போதைப்பொருள் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டவர்களில் பலர், கொலைகளில் ஈடுபடுகின்றமையும் நாளாந்த செய்திகளாகின்றன. அவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, மாணவர் சமுதாயத்தைக் காப்பாற்றவேண்டியது ஒவ்வொருவருடையதும் பொறுப்பாகும்.

நகர்ப்புறங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விலையுயர்ந்த போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் அதேநேரங்களில், கிராமப்புறங்களிலும்  தோட்டப்புறங்களிலும் கஞ்சா, கேரள கஞ்சா உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.

நகர்புறங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் ஒருசிலர், இவ்வாறான மோசமான பழக்கவழக்கத்தை அங்கும் விதைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். நல்லது தொற்றிக்கொள்ளும் வேகத்தை விடவும் தீய பழக்கங்கள் எளிதாக பற்றிக் கொள்கிறது. ஆகையால், மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்கவும் காப்பாற்றவும், நாம் அனைவரும் முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.  (02.02.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .