2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலாபநோக்க ‘கோட்டா’ அரசியல் முடிவுகள் அழிவுக்கே வித்திடும்

A.Kanagaraj   / 2021 செப்டெம்பர் 09 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணக்கு வழக்குகளில் ஏதாவது திருகுதாளம் செய்துவிட்டால், ‘கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாமே சரியாகிவிடும்’ எனக் கூறுவதைக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். அதைப் போலதான் தடுப்பூசி கணக்குகளும் உள்ளன என்பது, அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்தே அம்பலமாகியுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட, நன்கொடையாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒரேயொரு வகையான தடுப்பூசி மட்டுமே இல்லை; பலவகையான தடுப்பூசிகள் உள்ளன. அவற்றில் சில, அமைச்சர்களுக்கு ‘கோட்டா முறை’யில் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விரல் நீட்டியுள்ளார். ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்படுவதும் கண்டி மாவட்டத்தில் ஒருசில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மட்டுமே ஸ்புட்னிக் வீ தடுப்பூசி செலுத்தப்பட்டதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், ஆளும் தரப்பினருக்கு ‘தடுப்பூசி கோட்டா’ கிடைக்கின்றதோ என்பதை சந்தேகத்துக்கிடமின்றி உண்மையாக்கியுள்ளது.

ஆனால், பரவலாகச் செலுத்தப்படும் சினோர்ஃபாம், மொடனா, அஸ்டாசெனிக்கா உள்ளிட்ட தடுப்பூசிகளைத் தவிர ஏனைய தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களில் பலர் முதலாவது டோஸூடன் நிற்கின்றனர். முதலாவது, தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருமாதத்துக்குள் இரண்டாவது தடுப்பூசியையும் செலுத்திக்கொள்வதன் ஊடாகவே, நோயெதிர்ப்பு சக்தி உருவாகுமென பரவலாகக் கூறப்படுகின்றது.

ஆனால், கண்டி மாவட்டத்தில் அது தலைகீழாகவே நிற்கிறது. நாட்டில் முதலாவது தடுப்பூசியை இராணுவ வீரர் செலுத்திக்கொண்டு, சகலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இராணுவத்தளபதி, முக்கிய அரசியல்வாதிகளில் சிலர் தடுப்பூசியை செலுத்தி, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் உலாவவிட்டிருந்தனர்.

ஆனாலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளில் பலரும், எவ்வகையான தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர் என்பது, கண்களை மூடிக் கொண்டு பூனை பால்குடித்ததைப் போலவே உள்ளது.

இவ்வாறானவர்கள், ‘தடுப்பூசி கோட்டா’வின் ஊடாக, தங்களுக்குக் கிடைத்தவற்றில் செலுத்திக்கொண்டனரா? என்ற நியாயமான சந்தேகமும் எழுந்துள்ளது. பொது எதிரியான கொவிட்-19 நோய் ஒழிப்பின் போது, அரசியல் இலாபநோக்கத்துடன் செயற்படாமல் இருக்கவேண்டுமென எதிரணியைப் பார்த்து வசைப்பாடிய ஆளும் தரப்பினர், இப்படி தடுப்பூசி கோட்டாவுக்குள் மறைந்திருப்பது வேதனையானது.

அதுவும் ஒருவகையான அரசியல் இலாப நோக்கானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இதனூடாக அழிவுக்கான பாதையைத் தங்களுக்குத் தாங்களாகவே வெட்டிக்கொள்கின்றனர்.  மக்களிடத்தில் கரிசனையை கொண்ட எவருமே, இலாபத்தை நோக்காகக் கொண்டு செயற்படமாட்டார்கள்.

நாடும் மக்களும் இக்கட்டான நிலையில் இருக்கையில், எவற்றை வைத்தேனும் இலாபத்தை ஈட்டிக்கொள்ள நினைக்கக்கூடாது. ஏனெனில், கொரோனா தொற்றுக்காலத்தில் சாதாரணமாக மரணிப்போருக்கும் இறுதி ஊர்வலம் நிச்சயமற்றதாய் உள்ளது.

ஆகையால், வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கருதிற்கொண்டு, அரசியல் இலாபமற்ற வகையில் முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X