2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இல்லாதவர் முயலாமல் இருப்பதும் தவறு

A.Kanagaraj   / 2022 மார்ச் 03 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இல்லாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உயிர்களைக் காக்க உதவுவோம்

வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். எவரது வாழ்க்கைப் பயணமும் எவ்விதமான பிரச்சினைகளும் இன்றி முடிந்திருக்காது. அவ்வாறு முடிந்திருக்குமாயின், அவ்வாறானவர்கள் எதை பற்றியும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்; புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கவும் மாட்டார்கள். ‘தான் உண்டு, தன் வாழ்க்கை உண்டென’ இருந்திருப்பர். 

வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்.  இதில், குடும்ப வாழ்க்கையில் ஒருபடி மேல்தான் பிரச்சினைகளும் இருக்கும். இவற்றை தனிப்பட்ட பிரச்சினையாக கருதி விட்டு விடுவோம்.

உலகையே இன்னும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால்  சந்தித்த சவால்களை, ஓரிருவரிகளில் கூறிவிடவே முடியாது. கொரோனாவைப் பயன்படுத்திக்கொண்டவர்களும் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டவர்களும் உள்ளனர்.

பெரும் நிறுவனங்கள், ஊழியர் படையின் கட்டமைப்பை சரியாகச் செதுக்கிக்கொண்டன. அலுவலகங்களில் இரண்டு, மூன்று பேரின் வேலைகளை ஓரிருவரை வைத்து முடித்துக்கொள்ள முடியும் என்பதை கற்றுக்கொண்டன. ‘வீட்டிலிருந்து வேலை’ எனும் பொறிமுறையின் ஊடாக, வளங்களின் பயன்பாட்டை சுருக்கிக்கொண்டன.

வேலையாட்களைக் கொண்டு செய்யக்கூடிய வேலைகளை எல்லாம், வீடுகளில் குடும்ப உறுப்பினர்களை வைத்து முடித்துக்கொள்ளும் வகையில், குடும்பத்தலைவர்கள் மாறிவிட்டனர். இவ்வாறான தீர்மானங்களால், கூலி வேலை செய்வோரில் பெரும்பாலானவர்கள் வேலையிழந்தனர். அன்றாடம் கூலி வேலைகளைத் தேடித்தேடியே, பல குடும்பத் தலைவர்கள் மனவிரக்தி அடைந்துவிட்டனர். இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு தீர்மானித்துவிடுகின்றனர். இது முட்டாள்தனமானது.

வாழ்க்கையை, குடும்பத்தை, வரவு-செலவை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும். அன்றாடம் ஜீவியம் நடத்துவோருக்கு கிடைக்கும் சொற்ப கூலியை வைத்துக்கொண்டுதான், மூவேளையும் ஏதாவது சாப்பிட்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

மறுபு‌றத்தில் பார்த்தோமெனில், உணவை வீண்விரயம் செய்யும் ஒருபிரிவினரும் இருக்கத்தான் செய்கின்றனர். தங்களுக்குத் தேவையானதை மட்டுமே வாங்கி உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதனூடாக ஒருவேளை உணவையேனும் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழலாம்.

அதேபோல, தங்களுக்கு உதவுவதற்குப் பலரும் இருக்கின்றனர் என நினைத்துக்கொண்டு, சதாகாலமும் கையேந்தி வாழ்க்கை நடத்துவதை வழக்கமாக்கிக்கொள்ளக் கூடாது. தாங்களும் ஏதாவது முயற்சிகளை செய்யவேண்டும். இல்லையேல் உதவும் கரங்கள் நொடித்துவிட்டால், எதிர்பார்த்து இருப்போரின் வாழ்க்கை சூனியமாகிவிடக்கூடும்.

இருக்கின்றவர் உதவாமல் இருப்பதும் தவறு; இல்லாதவர் முயலாமல்  இருப்பதும் தவறு. இந்தத் தவறுகளை திருத்திக்கொண்டால், ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதாய் அமையும். ஆகையால், கடந்துவந்த பாதையில் கிடைத்த அனுபவங்களை, நடைமுறைக்கேற்ப மாற்றி, வாழ்ந்தோமெனில் வாழ்க்கையில் மகிழ்ச்சியை காணலாம்.

பிரச்சினைகளைகக் கண்டு அஞ்சி ஓடி தன்னுயிரை மாய்த்து, குடும்ப உறுப்பினர்களின் உயிர்களையும் அபகரிக்க எடுக்கும் தீர்மானம் முட்டாள்தனமானது என்பதை கூறிக்கொள்கின்றோம். (03.03.2022)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X