2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கனவில் வந்த காளியும் நிஜத்தில் கசக்கும் பாணியும்

Editorial   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனவில் வந்த காளியும் நிஜத்தில் கசக்கும் பாணியும்

நாணயம் போல இரு பக்கங்கள், ஒவ்வொன்றுக்கும் இருக்கத்தான் செய்கின்றன. ​ஆனால், பலவற்றுக்கு இரண்டு பக்கங்களும் தேவை; சிலவற்றுக்கு ஒன்​றேயொன்றுதான் இறுதியும் உறுதியுமான தீர்வாக அமையும். அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் (கற்பனைக்கதை) இடையில், அறிவிய​லே முன்னிற்கிறது.

மனிதர்களின் மதசிந்தனை, ஒழுக்கம், கற்பனை உள்ளிட்ட எல்லாவற்றையுமே, கொவிட்-19 நோய் பின்னுக்குத் தள்ளிவிட்டது. தங்களுடைய பாதுகாப்பு, கைகழுவும் போது போடும் சவர்க்காரத்தின் ஊடாகவே உறுதியாகிறது என்பதை நினைவூட்டுகிறது.

கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கையை, அறிவியல் சுக்குநூறாக்கிவிட்டது. கொரோனா வைரஸில் இருந்து தற்பாதுகாத்துக் கொள்வதற்கு, முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் ஒருமீற்றர் தூர இடைவெளியைப் பேணல் போன்ற இவையெல்லாம், அறிவியலால் ஆராயப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டவையே தவிர, மூடநம்பிக்கைகளில் இருந்தோ அல்லது, வேறெந்தச் சக்திகளின் மூலமோ வலியுறுத்தப்பட்டவை அல்ல.

வருமுன்னும் வந்தபின்னும் காப்பாற்றும் வகையில் விஞ்ஞான ரீதியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி, நூற்றுக்கு 95 சதவீதம், உகந்ததென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், கொரோனா வைரஸ் மட்டுமன்றி, எதிர்காலத்தில் உருவாகக் கூடிய எந்தவொரு வைரஸூக்கும் மூடநம்பிக்கைகள் தீர்வைத்தராது. அறிவியலே தீர்வைத்தரும் என்பது உறுதியாகியுள்ளது.

ஆகையால், மனிதர்களிடத்தில் அறிவியலின் மீதான தார்ப்பரியத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஆட்சியாளர்கள் வழிசமைக்கவேண்டும் மூடநம்பிக்கைகளுக்குள் மூழ்கிக்கொண்டு, மாயையைக் கட்டவிழுத்து விடுவதன் ஊடாக, கொரோனா வைரஸூக்குப் பின்னால்தான் செல்லவேண்டிய துர்பாக்கியம் ஏற்படும்.

உலகநாடுகள் அனைத்துமே, அறிவியலின்பால் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இங்கு ஆட்சியாளர்கள், அறிவியல், மூடநம்பிக்கை ஆகிய இரண்டு படகுகளில் கால்களை வைத்துக்கொண்டு பயணித்தனர். கொரோனா பாணியையும் பருகிமகிழ்ந்து, ஏனையோரையும் மகிழ்வித்தனர்.

கேகாலையைச் சேர்ந்த நாட்டுப்புற வைத்தியர் தம்மிக்க பண்டார, தன்னுடைய கனவில் வந்த காளியம்மன் அருள்பாலித்தாள், அத​னால், கொரோனா பாணியைக் காய்ச்சியதாக அறிவித்தார். ‘காளியம்மன்’ வழிபாடு, அவரது வீட்டு வளாகத்தில் மட்டும் இடம்பெறவில்லை. நாடளாவிய ரீதியில், உலகளவில் காளியம்மன் வழிபாடுகள் இருக்கின்றன. அப்படியாயின், ஏனைய பூசகர்களினதும் பக்தர்களினதும் கனவுகளில், காளி அருள்பாலிக்காமை கேள்விக்குறி, அத்துடன், பிற மதக் கடவுகளும் கனவில் தோன்றி, காட்சிதராமை பெருங்கேள்வி.

தம்மிக்கவின் வீட்டில் திரண்டிருந்த சனக்கூட்டத்தால், ‘பாணிக் கொத்தணி’ உருவாகுவதில் சந்தேகமே இல்லையென, ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பாணியைப் பருகியவர்களில் இதுவரையிலும் ​ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகத் தகவல் கசிந்துள்ளது.

பாணியைப் பருகியோருக்கும், கொரோனா தொற்றியிருக்கிறது எனும் செய்தி, பாணியை வாங்கியவர்களும் வாங்குவதற்காக முண்டியடித்தவர்களுக்கும் பாணி கசந்து இருக்கும். இங்குதான் மூடநம்பிக்கை தோற்றுவிட்டது; அறிவியல் வென்றுநிற்கிறது. ஆகையால், மூடநம்பிக்கைகளுக்குள் இருந்து கொஞ்சம், கொஞ்சமேனும் வெளியேற முயற்சிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X