Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியாவின் துன்பியல் போன்று தொடர்வதற்கு இடமளியோம்
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், வீடுகளுக்குள்ளே முடங்கிய மாணவர்கள், பட்டாம் பூச்சிகள் இரண்டு சிறகுகளையும் அடித்துக்கொண்டு, எவ்வளவு சுதந்திரமாகப் பறந்துதிரியுமோ, அதேபோன்றுதான், புன்முறுவலுடன் பாடசாலைகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் யாவும் கட்டம்கட்டங்களாகத் திறக்கப்பட்டன. இறுதியாக, அனைத்துத் தரங்களும் நவம்பர் 22ஆம் திகதியுடன் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாணவர்கள் பிரித்துப் பிரித்து தினமொதுக்கி, பாடசாலைக்கு அழைக்கப்படுகின்றார்கள்.
உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக திறக்கப்பட்ட அன்றைய தினமே, கிளிநொச்சியில் மாணவி ஒருவர், பாதசாரி கடவையில் வாகனமொன்று முட்டிமோதியதால் மரணமடைந்துவிட்டார். மூன்றாவது தடைதாண்டலுக்கான முதல்நாளன்றே, மனங்களை நெருடிய அந்தப் பெரும்சோகம் கண்களைக் குளமாக்கிவிட்டது.
இதற்கு முன்னரும் இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மனித உயிர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சில இடங்களில், உயிர்கள் எள்ளி நகையாடப்பட்டுள்ளன. பாதசாரி கடவையில் மட்டுமன்றி, வீதியோரங்களில் சென்றுகொண்டிருக்கும் போது ஏற்படும் கவனயீனங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகு பாதையொன்று விபத்துக்கு உள்ளானதில், மாணவர்கள் 06 பேர் மரணித்துள்ளனர். அதற்குப் பின்னர் கொதித்தெழுந்த மக்கள், அதிகாரிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, தமது ஆதங்கத்தை காண்பித்துள்ளனர்.
இதற்கிடையே, அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் விரல் நீட்டி, குற்றஞ்சுமத்திக் கொண்டிருக்கின்றனர். போன உயிர்கள் மீண்டெழாது; உயிர்தப்பியவர்களின் மனங்களை அந்தப் படகுப்பாதை பயணம், நெருடிகொண்டேதான் இருக்கும். இவ்வாறான படகுப்பாதை பயணங்களை, பலரும் எளிதில் விரும்பவும் மாட்டார்கள். இவ்வனர்த்தம் ஒரு வடுவாகவே இருக்கும்.
சம்பவமொன்று இடம்பெற்றுவிட்டால், குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இலகுவானது. ஆனால், எதிர்காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாத வகையில், ஏதாவது யோசனைகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றவா என்றால், பூஜ்ஜியமாகத்தான் இருக்கும்.
மக்கள் பிரதிநிதிகள், தத்தமது பிரதேசங்களின் பொதுப்பிரச்சினைகளை அரசாங்கத்தின் காதுகளுக்குள் கொண்டு செல்லவேண்டும். அதனை செவிமடுத்து துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அபிவிருத்தி எனும் மாயப் போர்வைக்குள் நின்றுகொண்டு, மக்களை ஏமாற்றாமல், சாதாரண மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வழிசமைக்க வேண்டும்.
பழைய பாலத்துக்குப் பதிலாக, புதிய பாலம் நிர்மாணிக்கப்படுகிறது. அதனால், தற்காலிகமாகவே இந்தப் படகுபாதை சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அப்படியாயின், அது போக்குவரத்துக்கு உகந்ததா? அதில் எத்தனை பேர் பயணிக்க முடியும்? அத்துடன் எத்தனை கிலோ கிராம் நிறையை ஏற்றிக்கொண்டு செல்லமுடியும் உள்ளிட்டவை தொடர்பில், அனுமதி அளித்தவர்கள் தெளிவாக இருந்திருப்பார்களாயின் கிண்ணியா துன்பியல் இடம்பெற்றிருக்காது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
32 minute ago
41 minute ago