2024 மே 17, வெள்ளிக்கிழமை

கெஞ்சிக் கோவணம் கட்டுவதை விட அம்மணம் மேல்

A.Kanagaraj   / 2020 நவம்பர் 05 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெஞ்சிக் கோவணம் கட்டுவதை விட அம்மணம் மேல்


தாவரத்தின் ஒரே விதையிலிருந்து வந்த தனியன்களிலோ, இனங்களிலோ, வேறுபாடுகள் தோன்றினால், அவை தற்செயலானவையே தவிர, இனத்தைப் பிரித்தறிய பொருட்படுத்த முடியாது. ஓரினம், மற்றோர் இனத்தின் விதையிலிருந்து எப்போதுமே தோன்றுவதில்லை என்ப​து "இனம்" பற்றிய உயிரியல் வரையறையாகும்.

இனம், மதம் தகவல்கள் உள்ளடக்கப்படாது என்ற அறிவிப்பால், பொதுத் தேர்தல் பரப்புரைகளில் “பிறப்புச் சான்றிதழ்” விவகாரம் சூடுபிடித்துள்ளது. “இலங்கையர்” என்பது, ஒவ்வொருவரின் இதயத்தையும் தட்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

1983 ஜூலை 23இல், தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அடாவடித்தனங்களுக்கு, நேற்றுடன் 37வயதானது. அந்த வடுக்கள் ஆறாதநிலையில், “இலங்கையர்” என்பது சிறுபான்மையினரின் இதயங்களை எவ்வளவுக்கு நெருடும்.

இனம், மதத்தைத் குறிப்பிடாது விடுவதன் ஊடாக, 152 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டிருக்கும் பதிவாளர் நாயகத் திணைக்களத்துக்கு ஞானம் பிறந்துவிட்டதென நினைத்தால் அதுதான் முட்டாள்தனம். பிறப்புச் சான்றிதழில் உட்சேர்க்கை அல்லது நீக்குதல் ஆகியவற்றுக்கான வேகத்தின் நோக்கம் புரியவில்லை.

பிறப்புச் சான்றிதழில் திருத்தத்தை நீதிமன்றத்தின் ஊடாக​வே முன்னெடுக்கமுடியும். இலங்கையில் வாழும் இனங்களுக்கு அமைவான சட்டங்களும் உள்ளன. தேசவழமைச் சட்டம், முஸ்லிம்களின் தனியாள் சட்டம், கண்டியச் சட்டம். இவையாவும் ஒவ்வோர் இனத்துடன் பிணைக்கப்பட்டது.

“இனம்” இல்லாமற் செய்யப்பட்டு “இலங்கையர்” எனப் புகுத்துவதால், அவ்வாறான சட்டங்களுக்குத் தேவையிருக்காது. சட்டங்களினூடாக அங்கிகரிக்கப்பட்ட மரபுரிமைச் சொத்துகளுக்கு என்ன நடக்கும். இவற்றின் ஊடாக வலுக்கட்டாயமாக, ஏதோவொன்றுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, தாய் – தந்தையின் திருமண விவரங்களையும் பிறப்புச் சான்றிதழில் உள்ளடக்காமல் இருப்பதற்கான அறிவிப்பு, கலாசாரங்களுடன் பின்னிப்பிணைந்திருக்கும். இனங்களின் சமூகக் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கச் செய்யும்; மேற்குலக நாடுகளுக்கு அதுபொருத்தமானதாக இருக்கலாம். எமக்கென “கௌரவம்” உள்ளது.

இந்தியர்கள், அவுஸ்திரேலியர்கள், பாகிஸ்தானியர்கள் என்றெல்லாம் அழைக்கையில், “இலங்கையர்” என்றழைத்தால், கௌரவமெனச் சிலர் மார்தட்டிக்கொள்ளலாம். அங்கெல்லாம், யஉரிமைகளுடன் வாழ்கின்றனர். ஆகையால் பிரச்சினையில்லை. ஆனால், இலங்கையில், உரிமைகளுக்காக இன்னுமே சிறுபான்மையினர், போராட்டிக் கொண்டிருக்கின்றனர். இதில், கெஞ்சிக் கோவணம் கட்டுவதை விட, அம்மணமாகப் போராடுவது உசிதமானது.

இவற்றுக்கெல்லாம் இடையில், பிறப்புச் சான்றிதழில் “இனம்” அ​ழிக்கப்படுவதாக, தென்னிலங்கையில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இனவாதத்​தைத் தூண்டித், தூண்டியே வாக்கு வங்கியை நிரப்பிக்கொண்ட பெரும்பான்மை இனம், இனத்தைத் தட்டியெழுப்பி, வாக்கைப் பெறுவதற்கான உள்முயற்சியாகவே மாற்றத்தை பார்க்கவேண்டியுள்ளது. (24.07.2020)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .