2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

ஜனாஸாக்களைக் காக்க, கூஜாக்களை நியமிக்காதீர்

Editorial   / 2020 நவம்பர் 06 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்வாழ்தல் பற்றிய  ஏக்கத்துடனும் ஆரோக்கியம் பற்றிய கவலையுடனுமே, பல்லின மக்களும் நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். காலம் இவ்வளவுக்கு வேகமாக ஓடுமென எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்; கண்மூடிக் கண்திறப்பதற்குள் புதுக் கலண்டர்களைத் தொங்கவைக்கப் போகிறோமென, கனவில்கூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

தங்களது உறவுகள், இறந்த பின்பேனும் இறைவனிடம் சென்றுவிடவேண்டுமெனப் பலரும் நினைப்பர். அதற்கென ஒவ்வொரு மதங்களிலும் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் நடைமுறையில் இருக்கும். சடலத்தை தகனம் செய்து, சாம்பலைக் கங்கைகளில் கரைத்தல், அடக்கம்செய்து கல்லறை கட்டுதல், புதைத்துவிட்டு இடத்தை அடையாளப்படுத்தல் என, இவையாவும் பல்லினங்கள் வாழும் நாட்டில் இருக்கும் சில முறைமைகளாகும்.

பல்லினங்கள் வாழும் நாடொன்றில், பொதுவிடயங்கள் குறித்துச் சில முடிவுகளை எடுக்கும் போது, மிகக்கவனமாகச் சிந்தித்து, தீர்க்கதரிசனத்துடன் எடுக்கவேண்டும். இல்லையேல், 'மாற்றான்பிள்ளை மனநிலை'தான் தொற்றிக்கொள்ளும்.

கொரோனா வைரஸின் வீரியத்தால், பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. இலங்கையில், இதுவரையிலும் 24 பேர் மரணித்துவிட்டனர்; சடலங்கள் யாவுமே எரியூட்டப்படுகின்றன. அதில், ஜனாஸாக்களும் எரியூட்டப்படுவது, முஸ்லிம்களுக்குச் சஞ்சலமே.

‘முதலி அலையில் சிக்குண்டு முஸ்லிம்கள் இறந்தவேளையில், சடலங்கள் எரியூட்டப்பட்டன. எனினும், உலக சுகாதார அமைப்பின் வழிமுறைமைகளின் பிரகாரம் ஜனாஸாக்களை அடக்கம் செய்யுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் ஒருமித்துக் குரல்கொடுத்தனர்; நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டியுள்ளனர்.

ஆனாலும், ஜனாஸாக்கள் எரியூட்டப்படுகின்றன. நிலத்துக்குக் கீழ், வைரஸ் பரவும் அபாயநேர்வுக்கான சாத்தியம் இருப்பதாக, முஸ்லிம்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் வழிகாட்டல் குறிப்புகளில், 'தகனம் செய்யப்பட வேண்டும்' என, மீளத் திருத்தப்பட்டது.

இவ்வாறு, மரணிப்போரின் சடலங்களைத் தகனம் செய்யவோ, மிக ஆழத்தில் அடக்கம் செய்யவோ முடியுமென, உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அதனை வழிமொழிந்திருந்தது.

ஆயினும், ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டன. அதனால், அதிருப்தியை ஏற்படுத்தினாலும் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, 'இதுதான் நமக்கும் தலைவிதி' என்றிருந்து விட்டனர். 

ஆனால், மரணங்கள் ஓய்ந்தபாடில்லை. முடிவிலியாகவே இருக்கின்றன. எனவே, முஸ்லிம்கள் மீண்டும் தமது கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்குப் பதிலளித்த ஆளும் தரப்பு, குழு நியமிக்கப்படுமென அதியுயர் சபையில் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளது.

இது, முஸ்லிம் சமூகத்துக்குள் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. குழுவை அமைத்தல், துரிதப்படுத்தப்படவேண்டும். அதில், முஸ்லிம்களுக்காக உண்மையாகவே குரல்கொடுக்கும் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும். கூஜாக்களை ஒதுக்கித்தள்ளிவிட வேண்டும்.

இலங்கை பல்லின, பல்கலாசார, பல்சமய நாடாகும். எனவே, இந்தப் பன்மைத்துவத்தை மதிக்க வேண்டும். எந்த இனத்தினதும் மத உணர்வைக் காயப்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில், இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும். (06.11.2020)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .