2025 மே 01, வியாழக்கிழமை

ஜயசூரியவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (06)  திரும்பிவிட்டார்.
அவர், இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். தமிழ் கட்சிகளின் தலைவர்கள்,மலையக கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார். 

1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் வீரர்களையும் சந்தித்திருந்தார்.
மாகாண சபை தேர்தல், மீனவர் விவகாரம், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களைத் தமிழ் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர் என்றும், இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மலைய வீடமைப்புத் திட்டம் தொடர்பில்,மலைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பிரஸ்தாபித்திருந்தனர் என செய்திகள் குறிப்பிட்டிருந்தது.

மோடி,தனது பதவிக்காலத்தில் நான்காவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். கடந்த மூன்று முறைகளையும் மோடியைச் சந்தித்திருந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள், மலையக கட்சிகளின் தலைவர்கள்,மேலே குறிப்பிட்ட விடயங்களை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றே வலியுறுத்தியிருந்தனர். 

ஆனால், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இந்தியாவுக்குப் பூச்சாண்டி காட்டிவிட்டு, தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்திருந்தனர். புதிய அரசாங்கம், மோடியின் வலியுறுத்தலுக்கு செவிசாய்க்குமா என்பதற்கெல்லாம் எதிர்காலமே பதில் கூறும். எனினும், இவ்வருடத்துக்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாது என, அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

 எனினும், மோடியை சந்தித்த, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்களில் ஒருவரான சனத் ஜயசூரிய, யாழ்ப்பாணத்தில் சர்வதேச விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 

 இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர், கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு 1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் மிக முக்கிய சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் பெயர் சூட்டப்பட இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும், இறுதி வரையில் அவர் பெயர் சூட்டப்படவே இல்லை. இதேவேளை, இந்த மைதானத்தை கிளிநொச்சியில் நிர்மாணித்திருக்கலாம் என்று அன்றைய அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறப்பட்டதாகவும், அவை கணக்கில் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

 இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையைத் தவிர்த்து, அனுராதபுரம் ஊடாக வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்திருந்தால், நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்கு கிடைத்திருக்கும் என்றும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனங்களை, பொருளாதார அபிவிருத்தி ரீதியாக வென்றிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதனையும் அன்றைய அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் அல்லது வட மாகாணத்தில், சர்வதேச விளையாட்டு மைதானத்தை இந்திய அரசாங்கம் தனித்து நின்று நிர்மாணிக்குமா என்பதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். ஆனால், அரசாங்கம் ஆரம்பப்புள்ளி போட்டால், அதற்கு இந்திய உதவக்கூடும் என்பதே எமது அவதானிப்பாகும். 

2025.04.07


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .