Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 05 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் துறையினரை ஓரங்கட்டிய நிவாரணப் பொதி
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம், அடுத்தாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும். நெருக்கடியான காலங்களில், இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து, புதிய வருடத்துக்கான நிதியை பெற்றுக்கொள்ளும். இது பெரும்பாலும் தேர்தல்கள் நடைபெறும் போது கடைப்பிடிக்கப்படும் முறைமையாகும்.
அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதில், அரச செலவுகளைத் தவிர, வேறெந்த நிவாரணங்களையும் எதிர்பார்க்க முடியாது.
தேர்தல் காலமெனில், மக்களின் மனங்களைக் கவரும் வாக்குறுதிகளை அள்ளிவீசி, நிவாரணப்பொதிகளை வழங்கி, வாக்குகள் பெற்றுக்கொள்ளப்படும். இவையெல்லாம் அரசியல் சூட்சுமங்களில் சிலவாகும். 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், நிவாரணங்களோ, சம்பள அதிகரிப்புகளோ இல்லை.
ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுமாதமே, பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் கிடுகிடுவென அதிகரித்தன. ஒவ்வொரு நாளும், ஏதோவொரு பொருளின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்று (05) முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிக்கின்றன.
இந்நிலையில்தான், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும்வகையில், ‘நிவாரணப் பொதி’யை அறிவித்துள்ளார். அதில், அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அங்கவீனமான படையினருக்கும் மாதாந்தம் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
சமுர்த்தி பெறுவோருக்கு ஆயிரம் ரூபாயும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபாய்க்கும், (மாதத்துக்கு 15 கிலோ கிராம் மட்டும்) ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 72 ரூபாய் நிவாரண விலையும் வீட்டுத்தோட்டங்கள் செய்வோருக்கு உர நிவாரணமும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கும் போது, நாட்டின் மூலை முடுக்குகளில் வாழும் அத்தனை பேரின் மீதும், அவை தாக்கத்தை செலுத்தும். ஆனால், நிதியமைச்சரின் நிவாரணப் பொதி, ஒரு சிலரின் மனங்களைக் குளிர்விப்பதாகவே அமைந்திருக்கின்றது. ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாக தனியார் துறையினர் மீது முழுவீச்சில் கரிசனை காட்டப்படவில்லை.
நொந்துபோய் வாழுவோருக்கு இந்த நிவாரணப் பொதி, ஓரளவுக்கு நிவாரணமளிப்பதாய் அமைந்தாலும், அதற்கான நிபந்தனைகளால், சிலருக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். உதாரணமாக, வீட்டுத்தோட்டத்துக்கான நிவாரணத்தை பெறுவதற்கான நிபந்தனையை குறிப்பிடலாம்.
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களின் செறிவைக் குறைப்பதற்கான தந்திரமாகவும் துருப்புச்சீட்டாகவும் இந்த நிவாரணப் பொதியைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் ஏதாவது விலை அதிகரிக்கப்பட்டால், நிவாரணம் நிர்வாணமாகிவிடும்.
ஒரு சில தரப்பினரை மட்டுமே ஓரளவுக்கு திருப்தியுறச் செய்திருக்கும் இந்த நிவாரணப் பொதி யோசனைக்கு அப்பாற்சென்று, வீழ்ந்து கிடக்கும், அல்லது தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டிருக்கும் தொழிற்றுறைகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்கு முயற்சி செய்திருந்தால், அரச, தனியார் துறையினர் எனும் பேதமின்றி, ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏதாவது ஒருவகையில் நிவாரணமும் விடிவும் கிடைத்திருக்கும். (05.01.2021)
6 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago