Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழைத் தட்டிவிட்டு நுழையத் துடிக்கும் ‘குடியேற்ற மொழி’
இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள், ஏதாவதொரு நெருக்குவாரத்துக்கு நாளாந்தம் முகங்கொடுத்துக்கொண்டே இருக்குமளவுக்கு, ஒவ்வொரு புறங்களாகச் சீண்டிப்பார்க்கும் செயற்பாடுகள், அப்பட்டமாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் மொழியுரிமை அப்பட்டமாக மீறப்பட்டு, சீனமொழிக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுவது அதனோர் அங்கமாகும். எனினும், கடுமையான அழுத்தங்கள் காரணமாக, பதிக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய நினைவுப்பலகை அகற்றப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களக் கட்டடத்தில், சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலத்திரனியல் நூலகம் நிறுவப்பட்டது. நினைவுப்பலகையில், இலங்கையின் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டு, சீன மொழிக்கு மூன்றாமிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
பிறமொழிகளைக் கற்றுக்கொள்வதிலோ, தெரிந்து வைத்திருப்பதிலோ எவ்விதமான தவறுகளும் இல்லை, ஆனால், அரச கருமமொழியொன்றை வேண்டுமென்றே இல்லாமல் செய்துவிட்டு, பலவந்தமாகப் புகுத்தப்படும் எந்தவொரு குடியேற்ற மொழி(யை)(களை)யும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
சட்டமா அதிபர் திணைக்களக் கட்டடத்தில் சீனமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பதியப்பட்ட நினைவுப்பலகை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்கமுடியாது. “திரைச்சீலையை விலக்கியதன் பின்னர்தான், அதிலிருந்தவை தெரிந்தன” எனும் வியாக்கியானம், முழு பூசணிக்காயையும் ஒரு பீங்கான் சோற்றுக்குள் மறைக்கும் செயலாகும்.
ஏனெனில், கொழும்புத் துறைமுக நகர வரவேற்புக் கல்லிலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, இன்னும் திருத்தப்படவில்லை, முக்கிய ரயில் நிலையங்களில், சீனமொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமை, ஏனைய மொழிகளைப் பின்தள்ளிவிட்டே நிற்கிறது.
ஒவ்வோர் இனக் குழுவினதும் அடையாளம், அதன் தாய்மொழியாகும். அதுவே அதன் தனித்துவம்; சிறப்பு. இதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலேயே உலக தாய்மொழி தினம், பெப்ரவரி 21ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. தற்போதைய நிலைமை நீடித்தால், தமிழைத் தாய்மொழியாகப் பேசுகின்ற, இலங்கையில் வாழ்வோர், தாய்மொழி தினத்தைக் கொண்டாடவே முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.
உலகநாடுகள் பலவற்றின் நிதியுதவியின் கீழ், பல்வேறான செயற்றிட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை நினைவுகூரும் வகையில், நினைவுக் கல்லில் அல்லது பலகையின் அடியில், ‘இந்த நாட்டினால் அன்பளிப்பு செய்யப்பட்டது’ என நிதி உதவியளித்த நாட்டின் பெயருடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், சீனாவின் நிதி உதவியளிப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு மட்டும், சீன மொழிக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதுவே, இலங்கையின் அரச கருமமொழிகளின் வரிசையில் முதலாவது இடத்திலிருக்கும் சிங்கள மொழியை அப்புறப்படுத்தி இருந்தால், இலங்கையர், நாட்டுப் பற்றாளர்கள், வானத்தைப் பிளக்குமளவுக்குக் குதித்துக் கூப்பாடு போட்டியிருப்பர்.
தமிழைத் தட்டிவிட்டு, ‘குடியேற்ற மொழி’யைப் புகுத்தும் செயற்பாடு கண்டிக்கத்தக்கது. அதனைத் தடுத்து நிறுத்திய சகலரையும் வாழ்த்துவதுடன், ‘வந்தபின்னர் கூப்பாடு போடாது, வருமுன்னர் காப்பதே சிறந்தது’ என வலியுறுத்துகின்றோம்.(24.05.2021)
4 minute ago
8 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
1 hours ago
1 hours ago