2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தவறான உதாரண புருஷர்களாக எப்போதும் மாறவேண்டாம்

Editorial   / 2021 மே 12 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறான உதாரண புருஷர்களாக எப்போதும் மாறவேண்டாம்

முழுநாடும் முடங்கிவிடுமா? என்றெழுந்திருந்த பேரச்சம் களையப்பட்டு, மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிக்கும் செய்தி, பலருக்கும் இனிப்பாக இருந்தாலும், அது ஜூன் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும். ஆக, இன்னும் 18 நாள்களுக்கு, மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘அத்தியாவசிய சேவை’ என்றெழுதப்பட்ட வாசகத்தை, வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டிக்கொண்டு, ஊர்களுக்குள் பலரும் நுழைந்துவிடுவர், ஆகையால், வந்துசெல்பவர்கள் தொடர்பில், ஆகக்கூடுதலான அவதானத்துடன் இருப்பதே, யாவருக்கும் நலன்பயக்கும்.

அத்தியாவசிய சேவைக்குள் மறைந்திருந்து அத்தியாவசியம் இல்லாதவை, கடந்த அலைகளின் போது விற்கப்பட்டன. முழுக்கோழிக்குள் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டு, முடக்கப்பட்ட பிரதேசத்துக்குள் எடுத்துச் செல்லமுற்பட்ட சம்பவமும் இடம்பெறாமல் இல்லை.

நாமெல்லாம் ஒரு சங்கிலித் தொடருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை புரியாதவிடத்து, பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. பொருள்களை விற்கவேண்டுமாயின் நுகர்வோர் இருக்கவே வேண்டும்; வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும். சுகதேகியாக இருத்தல், அதனைவிடவும் முக்கியம்.

ஆகையால், குழம்பியிருக்கும் குட்டைக்குள் மீன்பிடிக்கும் முயற்சியை, அத்தியாவசிய தேவைகளுக்குள் உள்ளடங்காத வர்த்தகர்கள், ஒருசில நாள்களுக்கேனும் கைவிட்டு, கொரோனா தொற்றொழிப்புக்கு ஒத்துழைக்கவேண்டும்.

சட்டத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்காவிடின், அலையலையாய் வருவதையும் அலைவதையும் எவராலும் தடுக்கவே முடியாது. ஆகையால், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவேண்டியது, சகலருடைய கடப்பாடாகும். இல்லையேல், கொரோனா நெருப்பு மலை வெடித்துச் சிதறுவது வெகுதொலைவில் இல்லை.

முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் தூக்கிச்செல்கின்றனர். ஆனால், சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் சரத் வீரசேகர, முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தமை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி, கொரோனா தொற்றுக்கு உள்ளானதாகக் கூறப்படும் மற்றுமோர் அமைச்சர், பொதுவெளியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார். சட்டம் சகலருக்கும் சமமானதாக இல்லாவிடின், ‘நமக்கென்ன’  என்ற திமிர்த்தனம் தலைதூக்கிவிடும்.

ஆட்சியில் இருப்பவர்களும், சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்களும் தவறான உதாரண புருஷர்களாக மாறிவிடக்கூடாது. கண்களுக்கே தெரியாத கொரோனா வீரத்தாண்டவத்தின் இறுதிப் பாகமாக, மூன்றாம் அலையை எடை போட்டுவிட்டுவிடக்கூடாது; இன்னும் மறைந்திருக்கலாம். பகுத்தறியும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுமை இருக்கும். நாட்டைச் சுடுகாடாக்கிவிட்டால், பிணங்களின் மீதிருந்தே ஆட்சிசெய்யவேண்டும். ஆனால், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அரசாங்கத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை அச்சொட்டாகப் பின்பற்றுவதைத் தவிர, மாற்றுவழியே இல்லை.

அதிகார மட்டத்தில் இருப்பவர்களும் அதனை அப்படியே பின்பற்றி, மக்களுக்கு உதாரண புருஷர்களாக விளங்கவேண்டும். இல்லையேல், சமூகத்தின் மத்தியில் தவறான விம்பம் காட்சிப்படுத்தப்பட்டு விடும். இது, முழு நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை, நாம் வலியுறுத்திக் கூறத் தலைப்படுகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X