2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

தூண்டி(ல்) விடும் ‘மாற்றம்’ வேண்டாம்

Editorial   / 2020 நவம்பர் 10 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“துடிக்கும் புழுவும் கௌவும் மீனும் இறையாகப் போகின்றோம் என்பதை சிக்கிக்கொண்டதன் பின்தான் உணரும்”. ஆதலால், எவ்வளவுதான் பசியாக இருந்தாலும் பசப்பு வார்த்தைகளை எளிதில் எவரும் நம்பிவிடக்கூடாது. ‘இரை’, ‘இரைக்கான இரை’ இவ்விரண்டையும் வகுத்தறிந்து கொள்ளவேண்டும்.

ஒன்றின் தேவைக்கு, மற்றொன்று இரையாவதை யாரும் தடுத்தாற்கொள்ள முடியாது. ஆனால், தூண்டி விடுவதன் ஊடாக முன்னெடுக்கும் விஷமத்தனமான பிரசாரங்களை நிறுத்துவதன் ஊடாக, ‘ ​வேண்டத்தகாத மாற்றத்துக்கு’ முற்றுப்புள்ளி வைக்கலாம்.

‘மாற்றம்’ ஏற்படவேண்டுமென்பதை எவரும் மறுதலிப்பதற்கில்லை. ஆனால், ‘சில மாற்றத்தை’ எவரும் விரும்புவதில்லை. அதிலொன்றுதான் ‘மதமாற்றம்’. இதில், தலித்துக்கள் எளிதில் சிக்கிக்கொள்கின்றனர். உரிமைக்காக, குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் சமூகத்தினர் மிக இலாவகமாக, வேட்டையாடப்பட்டு விடுகின்றனர்.

மதமாற்றம் எனும் தூண்டிலில், ஒரு மத​த்தைச் சேர்ந்த கடவுள் மீதான வேண்டாத பரப்புரைகள், புழுவாய் குத்தப்படுவதால், ஏழ்மை எனும் மீன் இலாவகமாக சிக்கிக்கொள்கிறது. மறுபுரத்தில், மூளைச்சலவையும் செய்யப்படுகின்றன.

எமது நாட்டில் மற்றுமன்றி பலநாடுகளிலும் இவ்வாறான, மத மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக, பலரும், தங்களது இன,மத அடையாளங்களை யுத்தக்காலத்தில், மாற்றிக்கொண்டிருக்கக்கூடும். இது எதிரியிடமிருந்து தப்பித்து கொள்வதற்காக,கையாளும் சூழ்ச்சிகளில் ஒருவகை.
சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டோர். தமது பரம்பரை மரபுவழி, இன,மதத்தை மீளவும் கடைப்பிடிக்கின்றார்களா? இல்லை, இதற்கிடையில், ‘மதமாற்றம்’ மிகவேகமாக விதைக்கப்படுகிறது. காதுக்குள் காது வைத்தாற்போல பலவும், பகிரங்கப் பிரசாரத்தின் மூலம் சிலவும் ​எந்நாளும் அரங்கேற்றப்படுகின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் உள்ளன. ஒரு மதத்தைச் சேர்ந்தவனின் பிரச்சினை, பிறிதொரு மதத்துக்கு மாறினால்தான் தீர்க்கப்படும் என்றால், மதமாற்றத்துக்கு உட்படுத்துவோரின் மதத்தில் பிரச்சினையோடு இருப்பவனும் மாற்று மதத்துக்கு மாறவேண்டும். அவ்வாறு எதுவுமே நடப்பதில்லை. இதற்கு மனமே மூலக்காரணமாகும்.

மன சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மிக பகிரங்கமாக, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் மத மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கடவுள் மீதான பயம், அறியாமை இவற்றை பயன்படுத்தியே மதமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எந்த மதமானாலும், அந்தந்த மதங்களில் நல்லப்போதனைகள் இருக்கின்றன. அவற்றை, முறையாக பின்பற்றினால், ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் “தூண்டி விடாமல்”, “தூண்டில் போடாமல்” விட்டாலேயே பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். (17.04.2019)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .