2024 மே 09, வியாழக்கிழமை

தேனைச் சூடாக்கியவன் புறங்கையை நக்கவே மாட்டான்

Editorial   / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேனைச் சூடாக்கியவன் புறங்கையை நக்கவே மாட்டான்

விஞ்ஞானம் என்னதான் வளர்ந்திருந்தாலும் மெஞ்ஞானமும் பாரம்பரிய சிந்தனைகளும், ஏ​தோவொரு வகையில் இருக்கத்தான் செய்கின்றன. கொவிட்-19 இரண்டாவது அலையில், அவை ஒவ்வொன்றாகப் புலப்படத் தொடங்கி விட்டன. ஒருபுறத்தில் விஞ்ஞானமும் மறுபுறத்தில் பாரம்பரிய முயற்சிகளும் அதிகரித்துள்ளன.

கொவிட்-19 நோயின் முதலாவது அலையின்போது, கைகளை இலகுவாக கழுவிக் கொள்வதற்கான இயந்திரம், ஒரே நேரத்தில் பலருக்கும் ஒட்சிசன் விநியோகிக்கும் வகையிலான இயந்திரம் உள்ளிட்டவற்றை, பாடசாலை மாணவர்கள் முதல் வைத்தியதுறையைச் சேர்ந்தவர்களும் கண்டுபிடித்தனர்.

தங்களுக்கு எளிதில் கிடைத்த பொருட்களை வைத்து, பாமர மக்களும், ஏதோவொன்றைத் தயாரித்துக்கொண்டனர். கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து ஓரளவுக்கேனும் தற்பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற அவாவில், துணியிலான முகக்கவசங்களை தைத்துக்கொண்டனர்; கொள்கின்றனர். இரண்டாம் அலை, மருந்துகளுக்கும் தடுப்பூசிகளுக்கும் வித்திட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசியிலும், ஒவ்வாமை தொடர்பிலான பேரச்சம் சூழ்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, சட்டியை உடைத்தலும் பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. நமக்கெல்லாம் மேல், சக்தியொன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உலகமே, கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டிருகின்றது.

எனினும், ‘தான்பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்பதைப் போல, தடுப்பூசியைச் சாத்தானுடன் ஒப்பிட்டு ​பேசிய, தென் ஆப்ரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயங், சமூக வலைத்தளங்களில் கடுமையாக வாங்கிக் கட்டிக்கொண்டார்; பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடப்ப​தே சிறந்தது.

கொவிட்-19 நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட பாரம்பரிய உள்ளூர் ஒளடதங்களை, விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துவதைத் துரிதப்படுத்துமாறு பிரதமர் ராஜபக்‌ஷ பணித்துள்ளார். தடுப்பூசி தொடர்பிலான அறிக்கையையும் கேட்டிருக்கின்றார். இது, ஒன்றில் மட்டும் தங்கியிருக்காமல், மாற்று ஏற்பாடுகளுக்கான வழிகாட்டலாகும்.

இதனிடை​யே, கேகாலை மஹா பத்திரகாளி தேவாலயத்தின் கப்புராலையால் (கப்பு மாத்தையா) தயாரிக்கப்பட்ட மூலிகைப் பாணியை, மக்களுக்கு வழங்கும் முறைமையைத் தயாரிப்பதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.


அக்குழு கூடாவிடினும், சபாநாயகர் தானும் அருந்தி, ஆளும் எம்.பிகளுக்கும் அருந்தக் கொடுத்துள்ளார். மக்களிடத்தில் நம்பிக்கையூட்டும் செயற்பாட்டாக இது இருந்தாலும், கேகாலையில் விநி​யோகிக்கப்பட்ட முறை, மக்கள் கூடிய விதம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்தப் பாணியை, விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. ஏனெனில், பக்கவிளைவுகளே பெரும் பிரச்சினையாகும். தேனைச் சூடாக்கி, மருந்துகளுடன் கலந்து குடிப்பதால், அது விஷமாகும் என கூறப்படுகின்றது.

ஆகையால், தேனைச் சூடாக்கியவன் புறங்கையை நக்கவே மாட்டான் என்பது மட்டுமே உண்மையாகும். இவ்விடயத்தில், மலர்களை நோக்கிச் செல்வதுதான் வண்டுகளுக்கு வழியென்றால், ‘மதி​’ நிலைமைகளைப் பற்றிச் சிந்தித்தேயாக வேண்டும். இத்தகைய சிந்தனையைத்தான் நாமும் வலியுறுத்துகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X