2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

தொப்புள் கொடி உறவாயினும் அடிமடியில் கையை வைப்பதா?

Editorial   / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொப்புள் கொடி உறவாயினும் அடிமடியில் கையை வைப்பதா?

இருப்பதைத் தாரைவார்த்து விட்டு, பட்டினியால் மடிவது, தற்கொலைக்கு ஒப்பான குற்றம்; உலகநீதி, தர்மங்களுக்கு உட்படாதது. இத்தகையதொரு நிலையில்த்தான், வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரமும் காணப்படுகின்றது.

30 வருடப் போரால் சகலவற்றையும் இழந்து நிற்கும் மீனவர்களின் ஒரே நம்பிக்கையாக, இந்தக் கடல்வளம் மட்டும்தான் இருக்கிறது. அதையும் அவர்கள், தொப்புள் கொடி உறவுகளுக்காகத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு எங்கே போவார்கள்?

முல்லைத்தீவில் மீனவர்கள், டிசெம்பர் 15 நடத்திய பேரணியும் அடிமடியைக் காப்பாற்றுவதற்குத்தான். இதேபோன்றதொரு பேரணியை செப்டெம்பர் 14, யாழில் நடத்திய மீனவர்கள், இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி, மீன்பிடி வளங்களைச் சூறையாடுவதைத் தடுக்குமாறு அதிகார தரப்பினரிடம் கோரியிருந்தனர். ஆனால், அவையெல்லாம் அப்பட்டமாக நடந்தேறுகின்றன.

கடல் அட்டைகளையும் பிற கடல்வாழ் உயிரிகளையும் இந்தியா சூறையாடுவதால்,  இலங்கைக்கு வருடத்துக்கு 500 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக பேராசியர் ஒஸ்கார் அமரசிங்கவின்  2011ஆம் ஆண்டு, கணிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மன்னார் முதல் முல்லைத்தீவு வரையான 480 கிலோ மீற்றர் நீளமும் 22 முதல் 60 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட கடற்பரப்பில் உள்ள மீன்வளங்களும் மீன் உற்பத்தியைப் பெருக்கக்கூடிய பவளப்பாறைகளும் தமிழ்நாட்டு மீனவர்களால் அழிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு, இரண்டு பகுதி மீனவர்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லை.

இந்திய, தமிழ்நாடு, இலங்கை அரசாங்கங்கள் தமிழ்நாட்டு- இலங்கை மீனவர் முரண்பாட்டின் முக்கிய குற்றவாளிகளாக உள்ளன. ஒரு நாட்டின் மீன்பிடிப் படகுகள், இன்னோரு நாட்டின் எல்லைக்குள் பிரவேசித்தால், அதைத் தடுப்பது பொறுப்பாகும்.  ஆனால், “இரு தரப்பினரும் மீன் வளங்களைக் கூட்டு முகாமைத்துவத்தின் கீழ்ப் பகிர வேண்டும்” என, இந்தியத் தரப்பினர் சொல்லி வருகிறார்கள். அதில் நியாயமில்லை.

இலங்கை அரச​தரப்போ, இராஜதந்திர ரீதியாக அணுகலாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதுடன், இழுவை மடிகளுக்கு எதிரான, வெளிநாட்டு படகுகளைக் கண்காணிக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் ஏனோதானோ என்றிருக்கிறது. இரண்டு சட்டங்களையும் நடைமுறைப்படுத்தினாலே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.

தொப்புள் கொடி உறவுகளுக்கிடையில், முரண்பாடுகளை உருவாக்கினால் ‘ஓர் எறியில் பல மாங்கனிகள் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பில்தான், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கவனிக்க, இரு அரசுகளும் தயாராக இல்லை என்பது பட்டவர்த்தனமாகிறது. அடிமடியில் கைவைக்க அனுமதி மறுப்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு முக்கியத்துவம் உறவுகள் அறுபடாதிருப்பதற்கும் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .