2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

நிலக்கரி கொள்முதல் சர்ச்சை: இழப்பு நுகர்வோர் தலையில் கட்டப்படுமா?

Janu   / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  மின்சார  சபை அண்மையில்  நுரைச்சோலை  லக்விஜய  மின் உற்பத்தி  நிலையத்திற்காக  மேற்கொண்ட  நிலக்கரி  கொள்முதல்  விவகாரம்,  நாட்டின்  எரிசக்தி  துறையில்  நிலவும் பாரிய நிர்வாகச் சீர்கேட்டையும் ஊழல் அபாயத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

நான்கு கப்பல்களில் விநியோகிக்கப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, மின்சார சபை சுமார் 2,796 மில்லியன் ரூபாய் நேரடி இழப்பைச் சந்தித்துள்ளதாகத் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதில் வேதனையான விடயம் என்னவென்றால், ஒப்பந்த விதிகளின்படி விநியோகஸ்தரிடமிருந்து அபராதமாக வெறும் 1,037 மில்லியன் ரூபாயை மட்டுமே மீளப் பெற முடியும் என்பதாகும். மீதமுள்ள 1,759 மில்லியன் ரூபாய் நட்டத்திற்கான பொறுப்பை யார் ஏற்பது?

தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட மின் உற்பத்திப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு, கெரவலப்பிட்டிய மின் நிலையத்திலிருந்து ஒரு அலகு 37.53 ரூபாய் என்ற அதிக விலைக்கு மாற்று மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதையே குறிக்கிறது. குறிப்பாக,  மூன்றாவது  கப்பல் மூலம்  வந்த  நிலக்கரியால்  மட்டும் 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின்  மின்சாரக்  கட்டமைப்பு இவ்வளவு பலவீனமான ஒப்பந்தங்களால் இயக்கப்படுவது கவலைக்குரியது.

இந்த  இழப்பு  நிதி ரீதியானது  மட்டுமல்ல,  தொழில்நுட்ப  ரீதியாகவும்  பாரதூரமானது.  நிர்ணயிக்கப்பட்ட 5,900 kcal/kg  வெப்ப  அளவை  விடக்  குறைந்த  தர நிலக்கரி  எரிக்கப்பட்டதால்,  பொயிலர்கள் மற்றும் டேர்பைன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்கூட்டியே சூடாக்கும் கருவிகளில் அடைப்புகள், பொயிலர் குழாய்களின் அரிப்பு மற்றும் டேர்பைன் இறக்கைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய மேலதிகமாக 160 மில்லியன் ரூபாய் செலவிடப்பட வேண்டியுள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்தி கட்டமைப்பின் ஆயுட்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

முறையான தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் இன்றி இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டது எவ்வாறு? இவ்வாறான முறைகேடுகள் இறுதியாக மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி நுகர்வோர் மீதே சுமத்தப்படும், ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதிக்கு 13.56சதவீத மின்கட்டண அதிகரிப்பை முன்மொழிந்துள்ள நிலையில்,  உள்கட்டமைப்பு  பற்றிய துறைசார்  மேற்பார்வைக்  குழு  இந்த  விவகாரத்தில்  வெளிப்படையான  விசாரணையை  நடத்தி, தவறு  செய்த  அதிகாரிகளைத்  தண்டிப்பதோடு,  எதிர்காலத்தில்  இவ்வாறான  பாதகமான  கொடுக்கல்வாங்கல்கள்  நடைபெறாமல்  தடுக்க  கடுமையான  கொள்முதல்  சட்டக்  கட்டமைப்பை  உருவாக்க  வேண்டும்.  பொறுப்புக்கூறல் இல்லாத எந்தவொரு அரச நிறுவனமும் நாட்டுக்கு சுமையே அன்றி சொத்தல்ல.

17.02.2026


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X