2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நல்ல மனப்பாங்குகள் வளர இயேசு பிறப்பில் உறுதி ஏற்போம்

Editorial   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல மனப்பாங்குகள் வளர இயேசு பிறப்பில் உறுதி ஏற்போம்

எப்போதும் மாற்று வழியில் செல்வது சிரமம்தான். ஆனால், பாதுகாப்பானது. இந்நன்நாளில் இது பொருத்தமானது. வித்தியாசமான நட்சத்திரத்தை கண்டு ஞானிகள் விரையும் போது, வ​ழிபாடு, எச்சரிக்கை, வழி இந்த மூன்றையும் பின்பற்றுகின்றனர். அதனால், இயேசு பாலகனைக் கண்டு சந்தோஷமடைகின்றனர்.

ஞானிகளுக்கு மட்டுமன்றி, ஒவ்வொருவருடைய வாழ்விலும் இந்த மூன்றும் மிக முக்கிய​மானவை. மற்றையவர் கடைப்பிடிக்கின்றார்களா, இல்லையா? என்பது நமக்குப் பிரச்சினையில்லை. ஆனால், தாங்கள் தங்களாகவே கடைப்பிடிக்கவேண்டும். அதுவே வாழ்க்கைக்கு சுபீட்சைத்தைக் கொடுக்கும்.

நமது உலகம் பாதுகாப்பு அற்றதாக மாறிவிட்டது. பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் உயிரிழப்பு, ஊனம், வாழ்வாதாரம் அழிப்பால், சொந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்து மக்கள் அல்லற்படுகின்றனர். அன்னை மரியாளும் புலம் பெயர்ந்திருந்தார்.

இன்றைய சூழ்நிலையில், ‘கொவிட்-19’ இடம்பெயர்தலைத் தடுத்திருக்கிறது. ஆனால், பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தடுக்கவில்லை. விரும்பினாலும் விரும்பாவிடினும் முடங்கி இருக்கத்தான் வேண்டும். ‘முடக்கம்’ பொதுவான பாதுகாப்பு அரணாக மாறிவிட்டது.

மனிதனால்கூட முற்றாக துடைத்தெறிய முடியாத வைரஸ், ஆட்கொண்டிருக்கும் நிலையில், பணக்கார்களும் ஏழைகளும், தொழில் செய்வோரும், வேலையற்றவர்களும் ஒருவேளை சாப்பாட்டுக்காக மற்றையவர்களை நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்குள் ‘முடக்கம்’ தள்ளிவிட்டது.  

பருவமழை இன்மை, சுற்றுச்சூழல் கேடு, புவி வெப்பமாயமாதல், இயற்கையின் சீற்றங்கள் எனப் பாதுகாப்பின்மை பன்முகப்பட்டதாய் உள்ளது. ஆனால், இந்நன்நாளில் பிறந்திருக்கும் இயேசுவின் பிறப்பு, ஒவ்வொருடைய வாழ்வின் மீதும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

அடிமைகள் விடுதலை பெறவும், சிறைப்பட்டோர் புது வாழ்வைப் பெறவும், இறையேசு மனுமகனாக பிறந்தார் என்பது வெறும் நம்பிக்கையல்ல. இவையெல்லாம் உறுதியாக நடக்கும் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்டு வரும் யதார்த்தங்களாகும். அதனை நாமெல்லோரும் அர்த்த புருஷ்டியாக்க வேண்டும்.

புலம் பெயர்ந்த அன்னை மரியாளின் மகப்பேறுவுக்கு சத்திரம் இல்லாவிட்டாலும் மாட்டுத்தொழுவம் கிடைத்தது. உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் கிடைத்தன. அதனால், குழந்தை இயேசுவின் பாதுகாப்பு உறுதியாது. அதேபோல, மேலே குறிப்பிட்ட மூன்றையும் உறுதிசெய்துகொண்டு நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு உறுதிபூணுவோம்.

இந்நன்நாளில், கரிசனை, பரிவு, இரக்கம் என்ற குணங்களை புதுப்பித்து கொள்வோம். சாதியம், தீண்டாமை, வறுமை நீங்கி சமத்துவம் நிலவுவதற்கு  உறுதியெடுப்போம். அதேபோல, நட்புறவு, புரிந்து கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு எனும் மதிப்பீடுகள் வளர உறுதி ஏற்போம்.

இயேசு பிறப்பு புத்துலகை படைக்கட்டும் அதனூடாக, ஜனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மை என்ற கோட்பாடுகள், அமைதி, மகிழ்ச்சி குடிகொள்ளட்டும் அதுவே எமது பிரார்த்தனையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .