2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நூற்றாண்டில் இன்னுமொரு ‘கோல்டன் பையன்’ இல்லை

Editorial   / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றாண்டில் இன்னுமொரு ‘கோல்டன் பையன்’ இல்லை

ஒவ்வொருவருக்கும் திறமைகள் இருக்கின்றன. அதிலொன்றை துல்லியமாக இனங்கண்டு, ​முழுவீச்சுடன் முன்னோக்கி பாய்பவரே, அதிசிறந்தவராக ஆகிறார். இது ஒவ்வொரு துறைகளுக்கும் பொருந்தும். சலித்து கொள்பவர்களிடமும் ஏதோவொரு திறமை இருக்கத்தான் செய்யும். அதனை தட்டியெழுப்பவேண்டும்.

இதில், சிலர் “நூற்றாண்டின் சிறந்தவர்” பெயரைப் பெற்றுக்கொள்கின்றனர். மரடோனாவும் அப்படிதான். உலகத்தில் அதிகூடிய இரகசிகர்களை கவர்ந்திழுத்திருக்கும் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என்ற பெயரைப்பெற்ற அவரது மரணச்செய்தி, நூற்றாண்டின் இழப்பாகும்.

பிரபல்யங்கள் சர்​ச்சையில் சிக்கிக்கொள்ளவது ஒன்றும் புதிதல்ல, மரடோனாவும், போதைப்பொருள் பாவனையில் சிக்கி தண்டனையை அனுபவித்தார், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம் சச்சரவை ஏற்படுத்தியிருந்தது. அவரது மேலாண்மையில் அவருக்கிருந்த முன் அனுபவம் குறைவு என்பதை அது காட்டியது.

ஆனால், மைதானத்தில் கிடைக்கும் ஒவ்வொரு பந்தையும் மிக இலாவகமாக கையாண்டு, ​கோல் அடிப்பதில் தனக்கு நிகர் தானே என்ப​தை நிரூபித்துள்ளார், எதிரணியிடமிருந்து பந்தை லாவகமாக கைப்பற்றி, தனியொருவனாக சிக்கிக்கொண்டாலும் தன் அணிக்கே பந்தை மாற்றிவிடுவார். இவை எல்லாவற்​றையும் அவருக்கு கிடைத்த ”தங்கக் காலணி” பறைசாற்றுகின்றது.

1986ஆம் ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்து கிண்ணத்தை சுவீகரித்து கொடுத்தவர். மரடோனா அடித்த இரண்டு கோல்கள், கால்பந்து வரலாற்றில் இடம் பெற்றது. காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற காரணமானவர்.

தண்டம் விதிக்கப்படாத முறையிலான முதலாவது கோல் "கடவுளின் கை" என்று அறியப்பட்டது. இங்கிலாந்தின் ஆறு வீரர்களை தாண்டி 60மீற்றர் தொலைவிலிருந்து அடிக்கப்பட்ட இரண்டாவது கோல் கண்ணைக் கவரும் விதத்தில் இருந்தது. அதனால் "நூற்றாண்டின் சிறந்த கோல்" என்று பொதுவாக அறியப்பட்டது.

அவருடைய ஆட்டங்கள், ஆட்ட நுணுக்கங்களை தேடினால் ஒவ்வொரு போட்டியிகளிலும் வித்தியாசமான நகர்த்தலை கையாண்டதை காணலாம். இவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக அஸ்டெகா ஸ்டேடியம் உறுப்பினர்கள் "நூற்றாண்டின் கோல்" என்ற சிலையை உருவாக்கி இதை விளையாட்டு அரங்கத்தின் நுழைவு வாயிலில் வைத்துள்ளனர்.

மரடோனாவின் வாழ்க்கையிலும் மேடு, பள்ளங்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும், கால்பந்து விளையாட்டு வீரர்கள், மரடோனாவை முன்னுதாரணமாகக் ​கொள்வர். இன்னும் சிலர் அவருடைய இலக்கமான 10ஆம் இலக்கத்தை​ பொறித்துக்கொள்வர். அவையெல்லாம் ஓர் ஈர்ப்பு. என்பதுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது இரங்கலில் ‘கோல்டன் பையன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். நூற்றாண்டில் இன்னுமொரு ‘கோல்டன் பையன்’ இல்லை என்பதே உண்மை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .