2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பாடசாலையில் இருந்து எந்தவொரு குழந்தையும் இடைவிலகக் கூடாது

R.Tharaniya   / 2025 ஜூலை 27 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பாடசாலையொன்று திறக்கப்பட்டால் சிறைச்சாலை ஒன்று மூடப்படும்” என்பது பிரான்ஸ் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான விக்டர் ஹியுகோவின் பிரபலமான கூற்றாகும். இந்தக் கூற்று உணர்த்துவது ஒரு நாட்டிற்கு பாடசாலைக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையாகும்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(24) நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை, பாடசாலை கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. தரம் 13 வரை கல்வி முக்கியமானது என்பதுடன், பாடசாலையில் இருந்து எந்தவொரு குழந்தையும் இடைவிலகக் கூடாது என்றார். 

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான  சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியுடன் எவ்வாறான பிணைப்பில் உள்ளனர். நாட்டில் இருக்கும் பாடசாலைகளின் நிலைமை என்ன? எத்தனை மாணவர்களுக்கு எத்தனை ஆசிரியர்கள் இருக்கவேண்டும் என வலியுறுத்தினார். 

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்குக் குறைவு, 20 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலை 752 உம் உள்ளன.
அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்றும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன என்றும் புள்ளிவிபரங்களை முன்வைத்தார்.
குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.

சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

இவ்வாறான சில பாடசாலைகளில் பாடசாலையில் முன்னெடுக்கவேண்டிய எவ்விதமான இதர செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை. விளையாட்டுப்போட்டி, பாடசாலை சுற்றுலா, ஏனைய போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், வெற்றி, தோல்விகளில் பங்கேற்றல் எவையும் இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி, இதிலிருந்து மாறவேண்டும் என்றார்.

சில பெற்றோர்  தங்களுடைய பிள்ளைகளை விளையாட விடுவதில்லை. சமூகத்தில் நடைபெறும், நல்லது அல்லது சோகமான சம்பவங்களில் பங்கேற்பதில்லை. விளையாடுவதற்குச் சென்றால், வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வரவேண்டாமென எச்சரிக்கின்றனர். நண்பர்களுடன் சேர விடுவதில்லை.  அக்கம் பக்கத்து வீடுகளில் மரண வீடுகள் இடம்பெற்றால், தங்களுடைய சொந்தக்காரர் வீட்டுக்குப் பிள்ளைகளை அனுப்பிவிடுகின்றனர்.

இவையெல்லாம் தவறான நடைமுறையாகும். தங்களுடைய பிள்ளைகள் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கணக்காய்வாளர்கள், சட்டத்தரணிகள் இல்லையேல் சமூகத்தில் உயர்பதவிகளில் மட்டுமே இருக்கவேண்டும் என நினைப்பதும் தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .