2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படிப்பினைகளை தந்து விக்கெட்டுகளை கௌவ்விய இருபதுக்கு 20

Editorial   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

படிப்பினைகளை தந்து விக்கெட்டுகளை கௌவ்விய இருபதுக்கு 20

இருபதுக்கு-20 என்றாலே பலருக்கும் கிரிக்கெட் ​போட்டிதான் ஞாபகத்துக்கு வரும், ஓட்டங்களைக் குவிக்க மிகவேகமாக ஆட​வேண்டிய ஆட்டம், நிதானம் தவறினால் விக்கெட்டுகளும் கிடுகிடுவென விழுந்துவிடும். குறுகிய நேரத்துக்குள் முடிந்துவிடும் போட்டி, அவ்வாறுதான் 2020ஆம் ஆண்டும் பலருக்கும் பல படிப்பினைகளை கற்றுத்தந்துவிட்டு இன்றுடன் விடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடங்களிலும் திட்டங்களைத் தீட்டி வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களிடத்தில் ‘திட்டம்’ எதனையும் தீட்டவிடாது, வருட இறுதிக்கே இழுத்துச்சென்ற கொவிட்-19, இரண்டாம் அலையையும் அடுத்த வருடத்துக்குள் தள்ளி விட்டுவிட்டு நிமிர்ந்து நிற்கிறது.

கற்பனை செய்யமுடியாத அளவுக்கு சுகாதார நெருக்கடியை உலகுக்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனூடாக ஒவ்வொரு மனிதனுடைய இயலுமை, இயலாமை போன்றவற்றை வெளிப்படையாக காணமுடிகிறது. பலரும் புதுமைப்படைத்தனர். இன்னும் சிலர் தங்களுக்குத் தேவையானதை உற்பத்திச் செய்துக்கொண்டனர்.

புதுப்புதுத் தேடல்களில் கவனத்தைச் செலுத்தினர். புத்தகங்களை வாசிக்கத்தொடங்கினர் ‘வீட்டிலிருந்து வேலை’ என்பதை இன்னும் சிலர் ‘வீட்டுவேலை’யாக மாற்றிக்கொண்டனர். பலர் பாசாங்கு காட்டினர், சம்பளம் வருகிறதுதானே என்ற நினைப்பில் இருந்தவர்களும் உளர். வேலை இழந்தவர்களும் இல்லாமற் இல்லை.

பக்கத்து வீட்டாரிடம் நலன்விசாரிக்க முடியாத அளவுக்கு இருண்டு போனது.​ கொரோனா வைரஸின் இன்று எத்தனைப்பேர் மரணித்தனர், தொற்றாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை ஒவ்வொருநாளும் கணக்கிடச் செய்துவிட்டது. ஆகையால், ‘கொரோனா’ எனும் தனி வசனத்தை ஆகக்கூடுதலாக உச்சரித்த ஆண்டாகவே 2020 விடைபெறுகின்றது.

இன்னும் சொல்லப்​போனால், சிறுமுதலாளிகளை பெரும் முதலைகளாக்கி விட்டது. கடத்தல், பதுக்கிவைத்தல், இமைகளை நிமிர்த்தும் அளவுக்கு விற்றல், கண்மூடித்தனமாக அத்தியாவசியப் பொருட்களை விற்றல் ஆகியன இடம்பெற்றன. மிக அத்தியவசியமற்றவை எனக் கருதப்பட்ட வியாபார ஸ்தலங்களுக்கு போடப்பட பூட்டுகள் கறல் பிடித்துவிட்டன.

கடுமையான பாதகங்களைச் செய்தாலும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் அளவுக்கு யோசிக்க​செய்தது. மற்றுமொரு ​தெரிவுக்கு வழிசமைத்தது. உழைப்பின் தார்ப்பரியத்தை புரியச் செய்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அனுபவங்களை கற்றுத்தந்து அர்த்தம் பொதிந்ததாக்கியது.

வயது முதிந்தவர்  திடீரென மரணித்துவிட்டால் ‘விக்கெட்’ விழுந்துவிட்டதாக பல ஊர்களில் கேலியாய் கூறுவர். ஆனால், கவனமின்மை, அலட்சியத்தால் கொரோனா வைரஸை தொற்றிக்கொண்டு பலரும் மரணித்துவிட்டனர் என்பது கவலையானது.

ஆனால், ‘மீள்வோம்’ என்ற நம்பிக்கை ஒவ்வொரு துறைகளைச் சார்ந்தவர்களிடமும் மேலோங்கி நிற்கிறது. ஆகையால், தற்பாதுகாப்பு எப்போதும் முக்கியம். கொ​ரோனா பரவுகிறது என்பதைவிடவும் பரப்பிவிடுதல் பேராபயத்தை தரும் ஆகையால், நாம் அனைவரும் மிக விளிப்பாய் இருந்து நாளைமுதல்  புதுப்பயணத்தை ஆரம்பிப்போம் என 2021க்கு ளவாழ்த்துக் கூறி, வரவேற்கின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .