2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாரதியாரின் பாடலைத் தவறாகப் புரிந்துகொண்ட ’கொரோனா’

Editorial   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதியாரின் பாடலைத் தவறாகப் புரிந்துகொண்ட 'கொரோனா'


சம்பவமொன்று இடம்பெறும் போதும் இக்கட்டான சூழ்நிலைகளின் போதும்தான் ஒருவரின் குணாதிசயத்தின் தன்மைகள், உண்மையான தோற்றங்கள் அம்பலத்துக்கு வந்தாடும். யார், யார் என்ன செய்கின்றனர் என்பதெல்லாம் தத்ரூபமாகத் தெரியும். பதவிநிலையில் இருப்பவர்கள் கூட, கீழ் நிலைக்குச் சென்று வேலை செய்து, நாள் கடமையை முடிக்கவேண்டிய கட்டாயமான நிலைமையொன்று ஏற்படும்.

அது, எல்லா நேரங்களுக்கும் பொருத்தமானதாக இருக்காது. இக்கட்டான நிலைமைகளின் போதுதான், சாதாரண வேலைகளையும் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவ்வாறு இறங்கிச்செல்வோரிடம் தலைமைத்துவமும் அதற்கான பண்பும் இல்லையென நினைத்தால், அது முற்றும் முழுதான தவறாகும்.

யாரிந்த பொதுச் சுகாதார பரிசோதர்கள், அவர்களுடைய கடமைகள், கடப்பாடுகள் என்ன, என்பதெல்லாம் நகர்ப்புறங்களைத் தவிர, ஏனைய இடங்களில் வாழ்வோருக்கு ஒரு பொருட்டல்ல. அவர்களின் பதவிநிலைகள் என்னவென்று தெரிந்துவைத்திருக்க வேண்டிய தேவையும் இருந்திருக்கவில்லை. இன்னும், சிலர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

எனினும், கொரோனா வைரஸூக்குப் பின்னரான காலப்பகுதியில், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பதவி தொடர்பில், ஒவ்வொருவரிடத்திலும் தெட்டத்தெளிவு ஏற்பட்டுள்ளது. உண்மையில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அவர்களின் வகிப்பாகத்தை விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை.

தங்களுடையதும் தங்கள் குடும்பத்தினருடையதும் உயிர்களைத் துச்சமென எண்ணி, பொதுப்பாதுகாப்பில் தங்களை முழுமூச்சாக அர்ப்பணித்திருக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கு, ஒவ்வொருவரும் பூரண ஒத்துழைப்பைக் கொடுத்தாலே கொரோனாவை விரட்டியடிக்கும் தூரம் வெகுதொலைவில் இல்லை.

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளைக் கேட்கவேண்டும்; அதன்படியே நடக்கவும் வேண்டும். இவை இரண்டையுமே செய்திருந்தால், நிலைமை கட்டுக்கடங்காது இவ்வளவு தூரத்துக்கு நீண்டு சென்றிருக்காது. இப்போது கொரோனாவின் பின்னால் ஓடவேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.


இது மகாகவி பாரதியாரின் பாடல்வரிகளில் சில; இதில், தீமை செய்பவரைக் கண்டால் முகத்தில் உமிழ்ந்துவிடுமாறே கவி வரிகள் அமைந்துள்ளன. ஆனால், தன்னுடைய உயிரைத் துச்சமென நினைத்து, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வந்த பொதுச் சுகாதார அதிகாரிகளின் மீது உமிந்தவருக்கு, வழங்கப்பட்டிருக்கும் தண்டனை போதாது என்பதே, பொதுவெளியில் இருக்கும் கருத்தாகும்.

ஓடோடிப் பிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர், பொதுச்சுகாதார அதிகாரியின் மீது உமிழ்ந்துவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.
நன்மைகளைச் செய்யாவிடினும் பரவாயில்லை; தீமைகளைச் செய்யாமல் இருக்கவேண்டும். குற்றங்களும் அதற்கான சட்டங்களும் அவற்றை மீறினால் வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கவேண்டும். இல்லையேல். தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இயலாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .